திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பவுர்ணமியை யொட்டி லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர்.

Update: 2018-01-01 22:30 GMT
திருவண்ணாமலை,

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலையில் பொதுமக்கள் நீராடி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரினம் செய்தனர். கோவிலில் பக்தர்களின் வசதிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி வரிசையாக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். ஆங்கில புத்தாண்டை யொட்டி அதிகாலையில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் மலர்களால் அலங்கரித்து, வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

நேற்று காலை 10.45 மணி அளவில் பவுர்ணமி தொடங்கியது. இதனையடுத்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேரம் செல்ல செல்ல கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இரவில் பனி பொழிவையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமின்றி நகராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு நேற்று இரவு அலங்கார ரூபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர், அருணாசலேஸ்வரர் கோவில் 5-ம் பிரகாரத்தில் அமைந்து உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதணை நடைபெற்றது.

இன்று அதிகாலையில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள நடராஜர், சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மலை உச்சியில் காட்சியளித்த மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மை நடராஜருக்கு அணிவிக்கப்படும்.

பின்னர் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் வீதிஉலா நடைபெற உள்ளது. 

மேலும் செய்திகள்