வந்தவாசி அருகே நள்ளிரவில் லாரி மீது கார் மோதியதில் கணவன், மனைவி, மகள் உள்பட 5 பேர் நசுங்கி சாவு

வந்தவாசி அருகே லாரி மீது கார் மோதிக்கொண்ட விபத்தில் கணவன், மனைவி, மகள் உள்பட 5 பேர் பலியானார்கள். பொங்கல் பண்டிகையை கொண்டாட வந்தவர்கள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-01-12 22:45 GMT
வந்தவாசி,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கூத்தம்பட்டை சேர்ந்தவர் வேலு. இவர் சென்னையில் எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வந்தார். குடும்பத்துடன் இவர் சென்னையிலேயே வசித்து வந்தார். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக மனைவி, குழந்தைகளுடன் சொந்த ஊரான கூத்தம்பட்டு கிராமத்திற்கு வருவதற்கு முடிவு செய்தார்.

அதன்படி நேற்று இரவு வேலு, அவரது மனைவி செல்வி, மகள் பிரியங்கா, உறவினர் நித்திஷ் ஆகியோர் காரில் புறப்பட்டு காஞ்சீபுரம் வழியாக வந்து கொண்டிருந்தனர். காரை வேலுவின் மற்றொரு உறவினர் சந்தோஷ்குமார் ஓட்டி வந்தார். காரில் இடமில்லாததால் வேலுவின் மற்றொரு மகன் பிரசன்னா, மகள் காயத்ரி ஆகியோர் பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்தனர்.

அவர்கள் வந்த கார் வந்தவாசி வெண்குன்றம் மலையடிவாரத்தில் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் வந்து கொண்டிருந்தது. வெங்காடு கூட்டுசாலை அருகே வந்தபோது தென்னாங்கூரை சேர்ந்த முருகன் (வயது 45) மற்றும் அவரது மகன் சந்தோஷ் ஆகியோர் மோட்டார்சைக்கிளை சாலையோரம் நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கார் எதிர்பாராத விதமாக முருகன் மீது மோதியது. அதனை தொடர்ந்து நிலைதடுமாறிய கார் எதிரே காஞ்சீபுரம் நோக்கி சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த எலக்ட்ரீசியன் வேலு, அவரது மனைவி செல்வி, மகள் பிரியங்கா, உறவினர்கள் நித்திஷ், சந்தோஷ்குமார் ஆகியோர் அந்த இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள். அவர்களது உடல்கள் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டன.

இதனிடையே பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த பிரசன்னா மற்றும் காயத்ரி ஆகியோர் விபத்து நடந்த காரை பார்த்தபோது தனது பெற்றோர் வந்ததையறிந்துகதறினர். அவர்கள் இது குறித்து போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். உடனடியாக வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பொற்செழியன் தலைமையில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர்.

அவர்கள் காரை உடைத்து உள்ளே பிணமாக கிடந்த 5 பேரையும் மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் மோதியதில் காயம் அடைந்த முருகன் மீட்கப்பட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த இடத்திலிருந்து வேலுவின் சொந்த ஊரான கூத்தம்பட்டு 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட வந்த அவர் மனைவி, மகளுடன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்