கூடலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு

கூடலூர் அருகே தடுப்பணையில் மூழ்கி பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-01-15 22:45 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை பாக்கனா பகுதியை சேர்ந்தவர் நவுசாத். இவரது மகன் பாயிஷ் (வயது 17). கூடலூர் செம்பாலாவில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்த பாயிஷ் தனது நண்பர்களுடன் கூடலூர் தேவர்சோலை அருகே மேபீல்டுவில் உள்ள தடுப்பணைக்கு நேற்று மதியம் 1 மணிக்கு குளிக்க சென்றார்.

பாயிஷ்க்கு நீச்சல் தெரியாது. இருப்பினும் தடுப்பணையில் இறங்கி நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு பாயிஷ் சென்றதாக கூறப்படுகிறது. திடீரென அவர் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்ட அவரது நண்பர்கள் பயத்தில் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து தடுப்பணையில் இறங்கி பாயிஷை தேடினர்.

சிறிது நேரத்தில் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பாயிஷை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த தேவர்சோலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பாயிஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து தேவர்சோலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் மூழ்கி பள்ளி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்