மாடுகளை குளிப்பாட்டிய என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி குட்டையில் மூழ்கினர்

மாட்டுப்பொங்கலையொட்டி குட்டைக்கு சென்று மாடுகளை குளிப்பாட்டியபோது என்ஜினீயர் உள்பட 2 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.

Update: 2018-01-15 23:00 GMT
பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகே மேல்கொத்தகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பிரதீப் (வயது 26). என்ஜினீயரான இவர் குடியாத்தத்தில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். அதே பகுதியை சேர்ந்த ரவியின் தம்பி வெங்கடேசனின் மகன் சுகேஷ் (17), குடியாத்தத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

மாட்டுப்பொங்கலையொட்டி பிரதீப்பும், சுகேசும் மாடுகளை குளிப்பாட்டுவதற்காக பல்லலகுப்பம் காப்புக் காட்டை ஒட்டியுள்ள கொடிக்கல் குவாரி குட்டைக்கு சென்றனர். அங்கு அவர்கள் தண்ணீருக்குள் இறங்கி மாடுகளை குளிப்பாட்டிக் கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் குட்டைக்குள் சேற்றில் சிக்கிக்கொண்டனர். இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கிராம பொதுமக்களுக்கு தகவல் அளித்தனர். அதை தொடர்ந்து கிராம பொதுமக்கள் விரைந்து வந்து 2 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்தபோது 2 பேரும் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மேல்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாட்டுப்பொங்கலை கொண்டாட தங்களது மாடுகளை குளிப்பாட்ட சென்ற 2 பேர் குட்டையில் சேற்றில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்