முருகன் கோவிலில் சப்பரத்திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

எலவனூர் முருகன் கோவிலில் சப்பரத் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2018-01-15 22:30 GMT
க.பரமத்தி,

சின்னதாராபுரம் அருகே எலவனூரில் உள்ள முருகன் கோவிலில் சப்பரத்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணி அளவில் 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் குளித்துவிட்டு கோவில் முன்பு அமர்ந்து பக்தி பாடல் பாடிவந்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் உள்ள விநாயகர் கோவிலுக்கு பாடிக்கொண்டே சென்றுவிட்டு, அங்கிருந்து மீண்டும் முருகன் கோவிலுக்கு வந்தனர்.

வீதிஉலா

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐம்பொன்னால் ஆன முருகன், வள்ளி, தெய்வானை சிலைகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் சாமி வீதிஉலா நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று காலை விநாயகர் கோவிலுக்கு சென்று பூஜை செய்துவிட்டு, மீண்டும் முருகன் கோவிலுக்கு வந்ததுடன் திருவிழா முடிவடைந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்