பஸ்-கார் மோதல்: மாணவர்கள் உள்பட 6 பேர் பலி 30 பேர் படுகாயம்

ஓசூர் அருகே அரசு பஸ்-கார் மோதிய கோர விபத்தில் 4 பள்ளி மாணவர்கள், ஒரு கல்லூரி மாணவர் உள்பட 6 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2018-01-15 23:15 GMT
ஓசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கு நேற்று முன்தினம் மதியம் தமிழக அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் ஓசூர் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஓசூரை தாண்டி சூளகிரி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் சுமார் 50 பயணிகள் பயணம் செய்தனர்.

அந்த பஸ் மாலை 4 மணியளவில் சூளகிரி பவர்கிரீடு அருகே குருபராத்பள்ளி பக்கமாக சென்றபோது கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் சாலையின் தடுப்புசுவரில் மோதி எதிரே வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், கார் மீது ஏறி தறிகெட்டு ஓடியது. அந்த நேரம் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினார்கள்.

சிறிது தூரத்தில் உள்ள பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஓசூர் அப்பாவு நகரைச் சேர்ந்த சரவணபாபு என்பவரின் மகன் மணீஷ் (வயது 21), சங்கர் மகன் சஞ்சய் (17), ஓசூர் டைட்டான் டவுன்சிப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் ஆதர்ஷ் (16), ஓசூர் ரெயில் நிலையம் அருகில் வசித்து வந்த கிருஷ்ணப்பா மகன் இசக்கியா (18), ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளியைச் சேர்ந்த மகேஷ் மகன் ஆகாஷ் (18) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பஸ் சக்கரத்தில் சிக்கி பஸ்சின் கண்டக்டரான தர்மபுரி மாவட்டம் ஏமகுட்டியூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (55) என்பவரும் பலியானார்.

மேலும் பஸ்சில் பயணம் செய்த பயணிகளில் மட்டாரப்பள்ளியை சேர்ந்த திருப்பதி (வயது 22), ஜோலார்பேட்டையை சேர்ந்த கருணாகரன் (44), கவிதா (35), வேலூர் சாதன்கோட்டையை சேர்ந்த சுஜாதா (27), பஸ் டிரைவர் தர்மபுரி நல்லம்பள்ளியை சேர்ந்த கிருஷ்ணன் (51), குந்தாரப்பள்ளியை சேர்ந்த செல்வி (29), திருப்பத்தூரை சேர்ந்த லட்சுமி (40), ஜனகன் (52) உள்பட 30 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று காயம் அடைந்த 30 பேரில், 19 பேரை கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கும், 11 பேரை ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியானவர்களில் மணீஷ் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். சஞ்சய், ஆதர்ஷ், ஆகாஷ் ஆகிய 3 பேரும் ஓசூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்கள். இசக்கியப்பா ஓசூரில் மத்திகிரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். மணிஷ், சஞ்சய், ஆதர்ஷ், இசக்கியப்பா ஆகிய 4 பேரும் காரில் பயணம் செய்ததும், மாணவர் ஆகாஷ் காரை ஓட்டிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) ஆறுமுகம், சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

மேலும் செய்திகள்