ஆட்சி விவகாரங்களில் தலையிட கவர்னர்களுக்கு உரிமை கிடையாது, முதல் அமைச்சர் நாராயணசாமி பேட்டி

ஆட்சி விவகாரங்களில் தலையிட கவர்னர்களுக்கு உரிமை கிடையாது என்று புதுக்கோட்டையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2018-01-15 23:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவிலுக்கு நேற்று மாலை புதுச்சேரி மாநில முதல்- அமைச்சர் நாராயணசாமி தை அமாவாசையையொட்டி தனது மகன் சோமசுந்தரம், மருமகள் யமுனாபாலா ஆகியோருடன் வந்தார். பின்னர் கோவிலில் அம்மனை தரிசனம் செய்து, சிறப்பு வழிபாடு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை, மாநில அரசின் வறட்சி நிவாரண தொகை ஆகியவை முழுமையாக வழங்கப்பட்டு உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடனை ரத்து செய்வதற்கு கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் மாநில அரசு, மத்திய அரசின் அனுமதியோடு தற்போது கூட்டுறவு கடனையும் ரத்து செய்து உள்ளது.

எங்களுக்கும், கவர்னர் கிரண்பெடிக்கும் நடப்பது சட்ட போராட்டம். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தமிழகம், புதுச்சேரி கவர்னர்கள் ஆட்சி விவகாரத்தில் தலையிட உரிமை கிடையாது. இது புதுச்சேரி கவர்னருக்கும் பொருந்தும்.

கவர்னர்கள் ஆய்வு என்பது இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லை என கட்சியின் மாநில தலைவர் தமிழிசை கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்