மாட்டுப்பொங்கல் அன்று பசுவுக்கு வளைகாப்பு நடத்திய விவசாயி

விவசாயி ஒருவர் தான் பாசமாக வளர்த்து வந்த பசுவுக்கு மாட்டுப்பொங்கல் தினமான நேற்று வளைகாப்பு நடத்திய நெகிழ்ச்சியான சம்பவம் கோவில்பட்டி அருகே நடந்துள்ளது.

Update: 2018-01-15 23:33 GMT
கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் மாரிசக்தி துரை. விவசாயியான இவர் 30-க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். இவரும், அவரது குடும்பத்தினரும் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் சூட்டி பாசத்துடன் பராமரித்து வருகிறார்கள்.

அதில் ஒரு பசுமாட்டுக்கு லட்சுமி என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார்கள். அந்த பசுமாடு மாரிசக்தி துரையின் குடும்பத்தினருக்கு செல்லப்பிள்ளை போன்றது. அது பிறந்தது முதலே அதை குழந்தை போல் பாவித்து வளர்த்து வருகிறார்கள்.

தற்போது லட்சுமி பசு 9 மாத சினையாக உள்ளது. அதன் மீது கொண்ட பாசம் காரணமாக, அதற்கு வளைகாப்பு நடத்த மாரிசக்தி துரை குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, மாட்டுப்பொங்கல் தினமான நேற்று தங்களது செல்லப்பசுவுக்கு வளைகாப்பு நடத்தினர்.

இதற்காக தங்களது உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து வரவழைத்தனர். பொதுமக்களும் ஏராளமானோர் வந்தனர். பின்னர் லட்சுமி பசுவுக்கு சேலை அணிவித்து, சந்தனம், குங்குமமிட்டு வழிபட்டனர். மேலும் பசுவின் கொம்பு மற்றும் கால்களில் வளையல் அணிவித்து மகிழ்ந்தனர்.

மேலும் செய்திகள்