ஓசூர் அருகே கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம்: யானைகள் தாக்கி மூதாட்டி பலி

ஓசூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் தாக்கியதில் மூதாட்டி பலியானார்.

Update: 2018-01-17 23:00 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இதில் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 15 யானைகள் வெளியேறியது. அவை உணவுக்காக அருகில் உள்ள கம்பள்ளி, மல்லேபாளையம், கோணசந்திரம் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்தன.

அங்கு விவசாய நிலங்களை சேதப்படுத்திய யானைகள் கூட்டம் நேற்று காலை 9 மணி அளவில் மல்லேப்பாளையம் பக்கமாக சென்று கொண்டிருந்தன. அந்தநேரம் கெலமங்கலம் அருகே உள்ள பொம்மதாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தப்பா என்பவரின் மனைவி சாவித்திரியம்மா (வயது 65), மல்லேப்பாளையம் வனப்பகுதியையொட்டி உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு சாப்பாடு கொண்டு சென்றார்.

அப்போது யானைகள் கூட்டத்தில் சாவித்திரியம்மா சிக்கிக்கொண்டார். அங்கிருந்து தப்பமுயன்ற அவரை யானைகள் துதிக்கையால் தூக்கி தாக்கி வீசின. இதில் படுகாயமடைந்த சாவித்திரியம்மா சம்பவ இடத்திலேயே பலியானார். இதை தூரமாக இருந்து கவனித்த பொதுமக்கள், கூக்குரல் எழுப்பி யானைகளை விரட்டினார்கள். மேலும் இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மாவட்ட வனஅலுவலர் தீபக் பில்கி, வனச்சரகர்கள் பாபு (ராயக்கோட்டை), ஆறுமுகம் (தேன்கனிக்கோட்டை), வனவர்கள் முருகன், பன்னீர்செல்வம், வனகாப்பாளர்கள் சிகாமணி, முருகன், தனபால், அருள்நாதன் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தார்கள். அவர்கள் பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டினார்கள். இதைத் தொடர்ந்து 15 யானைகளும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு சென்றன.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் யானை தாக்கி பலியான சாவித்திரியம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி பலியான சாவித்திரியம்மாவிற்கு ஹரீஷ்குமார் (46), தினேஷ்குமார் (43) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இதற்கிடையில் வனவிலங்குகள் தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு வழங்கக்கூடிய நிதி ரூ.4 லட்சத்தில், முதல்கட்டமாக ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை, சாவித்திரியம்மாவின் குடும்பத்திற்கு மாவட்ட வனஅலுவலர் தீபக் பில்கி வழங்கினார். 

மேலும் செய்திகள்