விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி பட தலைப்பால் சர்ச்சை

நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய படமான சீதக்காதி திரைப்படத்தின் தலைப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.

Update: 2018-01-17 23:00 GMT
கீழக்கரை,

நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் புதிய படத்திற்கு சீதக்காதி என்று பெயரிடப் பட்டுள்ளது. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இந்த படத்தினை இயக்குகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சீதக்காதி திரைப்படத்தின் தலைப்பு தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சீதக்காதி என்ற பெயர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெரும்வள்ளலாக வாழ்ந்து மறைந்த வள்ளல் சீதக்காதி பெயரால் உள்ளதால் அவரின் வாழ்க்கை தொடர்பான திரைப்படம் என்ற வதந்தி பரவி வருகிறது. குறிப்பாக கீழக்கரை பகுதியில் சீதக்காதி திரைப்பட தலைப்பு குறித்த சர்ச்சை அதிகஅளவில் எழுந்துள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழக செயலாளர் முகைதீன் இப்ராகிம் ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடிகர் விஜய்சேதுபதி நடிக்க சீதக்காதி என்ற பெயரிடப்பட்டுள்ள திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சீதக்காதி என்பவர் கீழக்கரை மட்டுமல்லாது உலகளவில் வள்ளல் சீதக்காதி என்று பெயர் பெற்றவர். ராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதியின் உயிர் நண்பரான சீதக்காதியின் புகழ் என்றும் மறையாது என்பதற்கு ஏற்ப வாழும் வள்ளலாக வாழ்ந்தவர். அவர் வாரி வழங்கிய நிலங்களும், அதில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களும் என்றும் அவரின் பெயர் சொல்லும்.

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைவரிடமும் அன்பாக இருந்தவர். முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பராக திகழ்ந்தவர் சீதக்காதி. அவரின் மேல்கொண்ட அன்பால் அவர் நடித்த திரைப்படத்தில் சீதக்காதி குறித்து பெருமையாக பாடியுள்ளார். அந்தஅளவிற்கு இந்த மண்ணின் மீதும், இந்த மக்களின் மீதும் அன்பு கொண்டு வாரி வழங்கியவர். அவரின் பெயரால் எடுக்கப்பட்டு வரும் இந்த புதிய திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீதக்காதி திரைப்படம் மேடைக்கலைஞனின் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் படமாக்கப்படுவதாக இயக்குனர் தரப்பில் கூறப்பட்டிருந்தாலும் சீதக்காதி என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது கீழக்கரை வள்ளல் சீதக்காதிதான். இதனால் மக்கள் மத்தியில் அதிகஅளவில் எதிர்பார்ப்பு ஏற்படும். எனவே, இதனை மனதில் கொண்டு படத்தில் சீதக்காதி என்ற பெயருக்கு சிறிதும் களங்கம் ஏற்படாமல் காட்சிகளை கவனமாக அமைக்க வேண்டும். இது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் உள்ள கடமையாகும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்