அதிகாரிகள் மெத்தனத்தால் மருத்துவ மேல்படிப்பில் சேர முடியாமல் டாக்டர்கள் அவதி பணியில் இருந்து விடுவிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு

அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு இடமாறுதல் உத்தரவு கிடைத்தும் பணியில் இருந்து விடுவிக்க அதிகாரிகள் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2018-01-17 22:00 GMT
மதுரை,

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்களாக பணிபுரிந்து வருபவர்களில் சிலர் மருத்துவ மேல்படிப்புக்காக நீட் தேர்வு எழுதி வருகின்றனர். நீட் தேர்வுக்கு அகில இந்திய அளவில் தமிழக டாக்டர்களுக்கு இடம் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதாவது, குறைந்த எண்ணிக்கையிலான சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன.

மேலும், தற்போது கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 6 மாதம் பணிபுரிந்திருந்தால் அதற்கு தனியாக மதிப்பெண்கள் தரப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு ஆஸ்பத்திரிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே, சுமார் 10 ஆண்டுகள் வரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றிய டாக்டர்கள் தரம் உயர்த்தப்பட்டதால் நீட் தேர்வில் தனி மதிப்பெண் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தை சேர்ந்த மேல்படிப்பு படிக்க விரும்பும் டாக்டர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக மீண்டும் கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இடமாற்றம் கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.

 இவர்களில் தகுதியானவர்களுக்கு மட்டும் இடமாறுதல் கவுன்சிலிங் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், சுமார் 6 மாதங்களுக்கு மேலாகியும் பணிமாறுதல் உத்தரவு பெற்ற டாக்டர்களில் பெரும்பாலானோரை பணியில் இருந்து விடுவிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மருத்துவ மேல்படிப்புகளில் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைப்பதே குதிரை கொம்பாக உள்ள சூழ்நிலையில், இடமாறுதல் உத்தரவு பெற்ற பின்னரும் அவர்களை பழைய பணியில் இருந்து விடுவிக்காமல் இருப்பது சுகாதார துறைக்கு பின்னடைவாகும். அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சிறப்பு சிகிச்சைப்பிரிவு நிபுணர்களாக நியமிக்கப்படும் போது, அரசு ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஆனால், அதிகாரிகளின் இது போன்ற மெத்தன செயல்பாடுகளால் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை கிடைக்காமல் போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சூழ்நிலையை அறிந்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்