விபத்தில் லாரி டிரைவர் படுகாயம்: ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியல்

விபத்தில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-01-18 22:45 GMT
தோகைமலை,

திருச்சி மாவட்டம் அதவத்தூரை சேர்ந்தவர் மனோகர்(வயது 50). லாரி டிரைவரான இவர், நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் அதவத்தூரில் இருந்து திருச்சி- தோகைமலை சாலையில் தோகைமலை நோக்கி சென்றார். அப்போது இடையப்பட்டி அருகே உள்ள வளைவில் சென்றபோது எதிரே தோகைமலையில் இருந்து திருச்சி சத்திரம்பேருந்து நிலையத்திற்கு சென்ற அரசு டவுன் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மனோகருக்கு கால் முறிவு ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

அப்போது பஸ்சில் வந்த பயணிகள் மற்றும் அருகில் இருந்த பொதுமக்கள் கால் முறிவு ஏற்பட்டு துடித்து கொண்டு இருந்த மனோகரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தோகைமலையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வேறொரு விபத்து காரணமாக கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்றதால் திருச்சி மாவட்டம் வன்னாங்கோவிலில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வருவதாக தகவல் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் வரும் வரை சாலையில் வாகனங்கள் போகக்கூடாது என்று கூறி அங்கிருந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆகும். அதுவரை அதிகமான ரத்தம் வெளியேறினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி சரக்கு ஆட்டோ மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மனோகரை அனுப்பி வைத்தனர். அப்போது கீழவெளியூர் அருகே 108 ஆம்புலன்ஸ் வந்ததை அறிந்த சரக்கு ஆட்டோ டிரைவர், 108 ஆம்புலன்சை வழி மறித்து அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் திருச்சி- தோகைமலை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்