திருப்பூரில் வாலிபரை தாக்கிய ஆயுதப்படை போலீஸ்காரர்

திருப்பூரில் வாலிபர் மீது தாக்குதல் நடத்திய ஆயுதப்படை போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-18 22:00 GMT
திருப்பூர்,

திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 29). இவருடைய மனைவி கீதா (25). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார்சைக்கிளில் திருப்பூரில் இருந்து குமார்நகர் வழியாக 60 அடி ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே போலீஸ் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வாகனம் முனிராஜ் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் சென்றது. இதனால், பயத்தில் முனிராஜ் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்னர் போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த போலீசிடம், ‘எதிரே வரும் போது மெதுவாக வர வேண்டியதுதானே’ என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர், வாகனத்திலிருந்து இறங்கி வந்து முனிராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அப்போது முனிராஜின் கன்னத்தில், வாகனத்தில் வந்த போலீஸ் காரர் தாக்கியுள்ளார். இதில் முனிராஜிக்கு காயம் ஏற்பட்டது. முனிராஜியும் பதிலுக்கு தாக்கியுள்ளார். இருவரும் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ரோட்டில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளும் ஆங்காங்கே தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கு வந்தனர். சிறிது நேரத்தில் பொதுமக்கள் அதிக அளவில் அந்த இடத்தில் கூடியதை தொடர்ந்து போலீஸ்காரர், வாகனத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார். ஆனால் பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் இதையும் பொருட்படுத்தாமல் வாகனத்தை எடுத்து கொண்டு புறப்பட்டு சென்று விட்டார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அங்கு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் குமார் நகர் தீயணைப்பு நிலையத்திற்கு எதிரே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் வாகனங்கள் குமார்நகர் வரை அணிவகுத்து நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பூர் வடக்கு போலீசார் மற்றும் உதவி கமிஷனர் அண்ணாத்துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மேலும், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தினால் அவினாசி ரோட்டில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் முனிராஜையும் அவருடைய மனைவி கீதாவையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், முனிராஜை தாக்கிய போலீஸ்காரர் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றும் அன்பழகன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து ஆயுதப்படை போலீஸ்காரர் அன்பழகனிடமும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்