கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர் முகிலன் கோர்ட்டில் ஆஜர் மீண்டும் 15-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் முகிலன் நேற்று வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார்.

Update: 2018-02-02 20:45 GMT
வள்ளியூர்,

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் முகிலன் நேற்று வள்ளியூர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை மீண்டும் 15-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த போராட்டங்களை சுப.உதயகுமார், புஷ்பராயன், மைபா.ஜேசுராஜ், முகிலன் போன்றவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினர். இவர்கள் மீது கூடங்குளம் போலீசார் பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். இதில், பொதுமக்கள் மீது போடப்பட்ட பல வழக்குகளை அரசு வாபஸ் பெற்றபோதும், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள 33 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.

முகிலன் கைது

இதற்கிடையில், கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியது தொடர்பாக தொடரப்பட்ட 13 வழக்குகள் மீதான விசாரணைக்கு வள்ளியூர் குற்றிவியல் கோர்ட்டில் முகிலன் ஆஜராகவில்லை. அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு, போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட அவர், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோர்ட்டில் ஆஜர்

நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்காக அவரை, போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் வள்ளியூர் குற்றவியல் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை 15-ந்தேதி வரை கோர்ட்டு காவலில் வைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவரை கோர்ட்டில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்தனர்.

கோரிக்கை

அப்போது அவர், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக கோஷமிட்டவாறு வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘ நியூட்ரினோ திட்டம் ஏற்கனவே நிறுத்தப்பட்டு இருந்தது. மாநில அரசின் மாசு கட்டுப்பாட்டு உரிமையை பறித்து நியூட்ரினோ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். 138 நாட்களாக சிறையில் இருக்கும் என்னிடம் இன்று (அதாவது நேற்று) தான் சில வழக்கு விவரங்களை கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. ஆகவே வழக்கை விரைவாக நடத்தவேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்’என்றார்.

பின்னர் அவர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக் கப்பட்டார்.

மேலும் செய்திகள்