அதிகாரிகளை கண்டித்து விருத்தாசலத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

விருத்தாசலத்தில் அதிகாரிகளை கண்டித்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-02 22:00 GMT
விருத்தாசலம்,

வேலை பார்க்கும் பெண்கள் எளிதில் பணியிடங்களுக்கு செல்லும் வகையில் 50 சதவீத மானியத்தில் அம்மா ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த ஸ்கூட்டர் பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் ஸ்கூட்டர் பெற விரும்பும் பயனாளிகள் நாளை மறுநாளுக்குள் (திங்கட்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பத்தின் போது ஆதார் எண், ஓட்டுனர் உரிமம், வருமானச்சான்று உள்ளிட்ட இதர சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இந்த திட்டத்தில் பயன்பெற ஓட்டுனர் உரிமம் இல்லாத பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று, ஓட்டுனர் உரிமம் எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த பெண்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக பெரியவடவாடியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை வாங்கி அதனை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றும் ஏராளமான பெண்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவ்வாறு வந்தவர்களில் 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம், அலுவலக நேரம் முடிவடைந்து விட்டதாக கூறி அதிகாரிகள் விண்ணப்பங்களை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பொது மக்களுடன் சேர்ந்து விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் மறியல் செய்ய முயன்றனர். இதற்கிடையே அங்கு வந்த மங்கலம்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட முயன்றவர்களை சமாதானப்படுத்தினர்.

இதையடுத்து பொதுமக்கள் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வாங்க கோரி கோஷம் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் மீனாகுமாரி, அனைவரிடம் இருந்தும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உடனே பெறப்படும் என கூறினார். இதை ஏற்ற பெண்கள் மற்றும் பொது மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் பெண்கள் தங்களது விண்ணப்பங்களை அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்