கல்வி, வேளாண் துறை இணைந்து செயல்பட வேண்டும் - கவர்னர் கிரண்பெடி

புதுவையில் மலர் கண்காட்சி தொடக்க விழாவில் பேசிய கவர்னர் ‘விவசாயம் குறித்து மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்பட கல்வித்துறையும், வேளாண் துறையும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Update: 2018-02-02 23:15 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி வேளாண்துறை சார்பில் தாவரவியல் பூங்காவில் 32-வது மலர், காய், கனி கண்காட்சி தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்து பேசினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் வைத்திலிங்கம், வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

விழாவில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது:-

புதுவை மாநிலம் புண்ணிய பூமியாக திகழ்கிறது. இங்கு பசுமையான வயல்கள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் இயற்கையாக நிறைந்து கிடக்கிறது. கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்களிடம் கேட்கப்பட்ட கருத்து கணிப்பில் 100 மாணவர்களில் 40 பேர் சீருடை பணி அதிகாரிகளாக மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் ஒரு மாணவன் மட்டும் விவசாயத்தில் ஈடுபட விரும்புவதாக தெரிவித்தார்.

விவசாயத்தை முற்றிலும் புறக்கணிக்கும் நிலை வந்துவிடக்கூடாது. எனவே கல்வித்துறையும், வேளாண் துறையும் இணைந்து செயல்பட வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை மாதம் அரைநாள் மட்டும் வயல்வெளிக்கு அழைத்துச்செல்ல வேண்டும். அவர்களுடன் பள்ளி ஆசிரியர்கள், வேளாண் துறை அதிகாரிகள் உடன் சென்று விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மத்திய அரசின் வேளாண் சார்ந்த திட்டங்களில் இருந்து கூடுதல் நிதியை பெற்று புதுச்சேரியில் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை வளம் தொடர்பான திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

புதுச்சேரி மாநிலத்துக்கு வறட்சி விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.18 கோடி நிதி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் பகுதியில் 100 சதவீதம் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு ஒரு ஹெக்டெருக்கு ரூ.20 ஆயிரமும், புதுவையில் 70 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டதால் ஒரு ஹெக்டெருக்கு ரூ.13,500-ம் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கூட்டுறவு வங்கியில் இருந்த விவசாயக்கடன் முழுமையாக ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி விவசாயிகளின் பயிர் காப்பீட்டு திட்டத்துக்கான முழு தொகையையும் மாநில அரசு கொடுத்து வறட்சி ஏற்பட்ட சமயத்தில் ரூ.8 கோடி காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெற்று விவசாயிகளுக்கு வழங்கி உள்ளோம்.

புதுச்சேரியில் படிப்படியாக விவசாயிகள் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர். அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. நமது மாநிலத்திற்கு தேவையான காய்கறிகள் பெங்களூர், ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து வருகிறது. நமது மாநிலத்தில் இருந்து நெல், கரும்பு ஆகியவை பயிரிடுவதை போல காய்கறிகளையும் பயிரிட வேண்டும்.

விவசாயிகள் நினைத்தால் நடக்காதது ஒன்றும் இல்லை. அவர்களால் எதையும் சாதிக்க முடியும். வேளாண்துறை அதிகாரிகள் அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். விவசாயத்துறை அதிகாரிகள் களத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். அலுவலகத்தில் இருந்தபடி கோப்புகள் பார்ப்பது மட்டும் அதிகாரிகளின் பணி கிடையாது. எனவே வேளாண்துறை அதிகாரிகள் களத்திற்கு சென்று சூழ்நிலைக்கு ஏற்ப ஆலோசனைகளை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. இந்த கண்காட்சியில் பிற மாநிலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட மலர் மற்றும் காய் கனி ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஆனால் வரும் காலத்தில் முழுமையாக இல்லாவிட்டாலும் 75 சதவீதம் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மலர், காய்கனி உள்ளிட்டவை இடம் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக துறை இயக்குனர் ராமமூர்த்தி வரவேற்றார். இதில் அபிவிருத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை அரசு செயலர் அன்பரசு உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் மலர் கண்காட்சியை பார்வையிட்டனர்.

இக்கண்காட்சி நிறைவு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.

இந்த கண்காட்சியில் இடம் பெற்றவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படுகிறது. இதில் அதிக பிரிவில் பரிசுகள் பெறுபவருக்கு மலர் ராஜா, மலர் ராணி என்ற பட்டமும் வழங்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்