சுற்றுச்சூழல் என்ஜினீயரின் 10 வங்கி கணக்குகளை ஆய்வு செய்து விசாரணை

திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ரெங்கசாமி (வயது57). இவர் முரளிதரன் என்பவரிடம் கல்குவாரி நடத்த அனுமதி வழங்குவதற்காக ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.

Update: 2018-02-02 23:15 GMT
திருச்சி,

திருவானைக்காவல் பெரியார் நகரில் தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் வைத்து நேற்று முன்தினம் காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பின்னர் திருவானைக்காவலில் உள்ள ரெங்கசாமியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது அவரது வீட்டில் இருந்து 1 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.4½ லட்சம் ரொக்கப்பணம், ரூ.30 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பத்திரங்கள், தபால் நிலையங்களில் வாங்கி உள்ள சேமிப்பு பத்திரங்கள், 10 வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர்களில் உள்ள நகை பற்றிய விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இந்த நகைகள் எல்லாம் எந்த வருமானத்தின் அடிப்படையில் வாங்கப்பட்டது என்பது பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது . பின்னர் ரெங்கசாமி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ரெங்கசாமி கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு நேற்று சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒவ்வொரு வங்கியிலும் அவரது கணக்கில் உள்ள பணம் இருப்பு, லாக்கர்களில் உள்ள நகை விவரங்கள் ஆகியவற்றையும் சேகரித்தனர். மேலும் ரெங்கசாமி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளதால் முதல் தகவல் அறிக்கை நகல் உள்ளிட்ட ஆவணங்களையும் சென்னையில் உள்ள சுற்றுச்சூழல் இலாகா தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் ரெங்கசாமி பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என தெரிகிறது.

மேலும் செய்திகள்