சேலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ரோகிணி ஆய்வு

சேலம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உரக்குழி உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ரோகிணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-02-02 22:30 GMT
சேலம்,

சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சர்க்கார்கொல்லப்பட்டி மற்றும் அய்யம்பெருமாம்பட்டி பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ரோகிணி நேரில் சென்று ஆய்வு செய்தார். பசுமை வீடு, சோலார் மின்விளக்கு அமைக்கும் பணிகள் குறித்தும், அதனை தொடர்ந்து அய்யம்பெருமாம்பட்டி ஊராட்சியில் பாரத பிரதமர் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடு, ரூ.12 ஆயிரம் மதிப்பில் தனிநபர் இல்லக்கழிப்பறை, ரூ.12,800 மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உரக்குழி மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உறிஞ்சு குழி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு திட்டப்பணிகளை விரைந்து முடித்திடவும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது சேலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், திருவரங்கம், வட்டார உதவி பொறியாளர் விஜயபாஸ்கர், தாசில்தார் திருமாவளவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆய்வு முடிவில் கலெக்டர் ரோகிணி கூறியதாவது:-

ஊரக பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் 300 சதுர அடி குறையாமல் புதிதாக வீடு கட்ட அரசால் மானியம் வழங்கப்பட்டு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தனி நபர் நிலங்களில் கிணறு அமைத்தல், மண்கரை, கல்கரை, உரக்குழிகள், பழமரக்கன்றுகள் நடுதல், உறிஞ்சு குழி அமைத்தல், ஆடு, மாடு கொட்டகைகள் அமைத்தல் ஆகிய பணிகள் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்