சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்களை கடலில் கொட்டி மீனவர்கள் போராட்டம்

சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில், அதிகாரிகளை கண்டித்து மீன்களை கடலில் கொட்டி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2018-02-03 23:00 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி லூர்துமாதா தெருவை சேர்ந்தவர் சகாய பிளோவியஸ் (வயது 40). சானல்ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோக் (40). இவர்களுக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் அதே பகுதியை சேர்ந்த 30 மீனவர்கள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்துவிட்டு இரவு 9 மணிக்கு மேல் கரை திரும்பினர். சின்னமுட்டம் துறைமுகத்தில் இரவு 9 மணிக்குள் விசைப்படகுகள் கரை திரும்ப வேண்டும் என அதிகாரிகள் விதிமுறை விதித்துள்ளனர். அதன் பின்பு வரும் விசைப்படகுகள் துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.  

இந்தநிலையில், சகாய பிளோவியஸ், அசோக் ஆகியோரின் விசைப்படகுகள் கரை திரும்பிய போது, துறைமுக நுழைவு வாயில் சங்கிலியால் அடைக்கப்பட்டிருந்தது. இதனால், அந்த விசைப்படகுகள் துறைமுகத்துக்குள் நுழைய முடியவில்லை. இதுகுறித்து, மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சங்க பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நள்ளிரவில் இரண்டு விசைப்படகுகளும் உள்ளே அனுமதிக்கப்பட்டன.

இதையடுத்து, மறுநாள் முதல் சின்னமுட்டத்தை மேற்கு கடற்கரையுடன் இணைப்பதை எதிர்த்து வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. அத்துடன் வியாபாரிகள் யாரும் வராததால் துறைமுக ஏலக்கூடம் மூடப்பட்டது. இதனால், இரண்டு விசைப்படகுகளில் இருந்த மீன்களையும் சந்தைக்கு எடுத்து செல்ல முடியவில்லை.

இதனால் விசைப்படகுகளில் இருந்த மீன்கள் கெட்டு அழுகின. இதையடுத்து வேலைநிறுத்தம் போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும், அதிகாரிகளை கண்டித்தும் நேற்று மீன்களை கடலில் கொட்டி போராட்டம் நடத்தினர். இதில் 2 விசைப்படகுகளில்  இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள மீன்கள் கடலில் கொட்டப்பட்டன.

மேலும் செய்திகள்