பிளஸ்-1 மாணவரை கத்தியால் குத்திய உடற்கல்வி ஆசிரியர் கைது

தனியார் பள்ளியில் பிளஸ்-1 மாணவரை கத்தியால் குத்திய உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Update: 2018-02-08 01:29 GMT
கரூர்,

கரூர் அருகே மணவாடியில் ஆசிரமம் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தை சேர்ந்த ஹதிக்கூர் ரகுமான் (வயது16) பிளஸ்-1 வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு படித்து வருகிறார். அதே பள்ளியில் தாந்தோன்றிமலையை சேர்ந்த பன்னீர்செல்வம் (38) உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஹதிக்கூர் ரகுமான் கிரிக்கெட், ஜூடோ உள்ளிட்ட போட்டிகளில் அதிகம் ஆர்வம் கொண்டு விளையாடுவது உண்டு. சில நேரங்களில் பள்ளியை தவிர்த்து வெளியில் நடைபெறுகிற போட்டிகளிலும் மாணவர் கலந்து கொண்டு விளையாடுவது வழக்கம். இதனை உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் தட்டிக்கேட்டு கண்டித்துள்ளார். இதனால் மாணவருக்கும், உடற்கல்வி ஆசிரியருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் பள்ளி மைதானத்தில் நேற்று முன்தினம் மதியம் மாணவர் ஹதிக்கூர் ரகுமானுக்கும், உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சக ஆசிரியர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். இதற்கிடையில் ஆசிரியர் பன்னீர்செல்வம் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து சிறிய கத்தியை எடுத்து வந்து மாணவர் ஹதிக்கூர் ரகுமானை சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு வயிறு, மார்பு மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர் சிகிச்சைக்காக தாந்தோன்றிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில் மாணவர் தன்னை தாக்கியதாக உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார்.

இந்த நிலையில் மாணவர் அளித்த புகாரின் பேரில் உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து நேற்று காலை கரூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 1-ல் மாஜிஸ்திரேட்டு இல்லத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் மாணவர் ஹதிக்கூர் ரகுமான் தன்னை தாக்கியதாக பன்னீர்செல்வம் புகார் அளித்தார்.

அதன் பேரில் மாணவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே நேற்று காலை பள்ளி வழக்கம் போல இயங்கியது. மாணவர்கள், பெற்றோர் தரப்பில் போராட்டம் நடத்தலாம் என தகவல் பரவியது. ஆனால் எந்தவித போராட்டமும் நடைபெறவில்லை.

இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேஷ்மூர்த்தி உத்தரவின் பேரில் மாவட்ட கல்வி அதிகாரி சாமிநாதன் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். இதில் உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகளை கூறினர். மேலும் விசாரணையில் பன்னீர்செல்வம் மாணவரை கத்தியால் குத்தியதை கல்வி அதிகாரி உறுதி செய்தார். இதன் அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் கல்வி அலுவலர் சமர்ப்பித்தார்.

இந்த நிலையில் உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வத்தை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. இது தொடர்பான அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரி வித்தனர். 

மேலும் செய்திகள்