வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமியை கண்டித்து வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2018-02-08 01:40 GMT
வேலூர்,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமியை கண்டித்து கடந்த 2-ந் தேதி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு துறைவாரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆய்வு கூட்டங்களின் போது கலெக்டர் கந்தசாமி கடுஞ்சொற்களால் அரசு ஊழியர்களை பேசுவதாக அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு கலெக்டர் கந்தசாமி நேரில் வந்து பேசினார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியை கண்டித்தும், திருவண்ணாமலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாகவும் வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சரவணராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜாமணி, வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சிதுறை சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்கள், திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமி, அரசு ஊழியர் விரோத போக்கை கைவிட வேண்டும் என்றும், அரசு ஊழியர்களை கடுஞ்செற்களால் பேசுவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். கலெக்டர் கந்தசாமி, அரசு ஊழியர்கள் விரோத போக்கை கைவிடவில்லையென்றால் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

இதில் கல்வித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயசீலன் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்