கடையில் வாங்கிய தீவனம் தின்ற 3 மாடுகள் சாவு

கடையில் வாங்கிய மாட்டுத்தீவனம் தின்ற 3 மாடுகள் பரிதாபமாக இறந்தன.

Update: 2018-02-08 02:16 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் கிராமத்தை சேர்ந்தவர் அப்பு மகன்கள் சக்திவேல், அழகுவேல். இவர்கள் இருவரும், விவசாயத்துடன் கறவை மாடும் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அருகிலுள்ள கடையில் தனியார் கம்பெனி மாட்டுத்தீவனம் வாங்கி வந்து கறவை மாடுகளுக்கு கொடுத்துள்ளனர். தீவனத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாடுகள் தள்ளாடி மயங்கி கீழே விழுந்தன. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாடுகளுக்கு முதலுதவி செய்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த கால்நடை மருத்துவர்கள், மாடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 3 மாடுகள் பரிதாபமாக இறந்தது. சிகிச்சையில் சக்திவேலின் ஒரு மாடு மட்டும் பிழைத்து கொண்டது. பின்னர் இறந்த மாடுகளை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். மாட்டுத்தீவனம் சாப்பிட்ட மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாட்டுத்தீவனத்தில் சேர்க்க கூடாத ரசாயன பொருட்கள் ஏதாவது கலக்கப்பட்டதா? அல்லது வேறு காரணத்தினால் மாடுகள் இறந்ததா? என கால்நடைத்துறையினர் தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது போன்ற மாட்டுத்தீவனம் சாப்பிட்ட மாட்டின் பாலை அருந்துவதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுத்துமா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரி வித்தனர். 

மேலும் செய்திகள்