ஆசிரியர்கள் வைப்புநிதியில் ரூ.29 லட்சம் மோசடி: உதவி தொடக்க கல்வி அலுவலர் பணி இடைநீக்கம்

ஆசிரியர்கள் வைப்புநிதியில் ரூ.29 லட்சம் மோசடி செய்ததாக, ஓசூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2018-02-08 03:01 GMT
ஓசூர்,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த்(வயது 58). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உதவி தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, சூளகிரி உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் பிரேம்ஆனந்த் பணியாற்றினார். அப்போது, அவரது கட்டுப்பாட்டில் 49 தொடக்கப்பள்ளிகளும், 18 நடுநிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வந்தன. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றினர்.

ஒன்றிய அளவில் பணிபுரியும் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கான தொகையை உதவி தொடக்க கல்வி அலுவலர் தான் அவர்களது வங்கி கணக்குக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் பிரேம் ஆனந்த், சூளகிரியில் பணியாற்றிய 3 ஆண்டுகளில் ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த வைப்புநிதியை, சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போதைய சூளகிரி உதவி தொடக்க அலுவலர் சுதாவிடம், பிடித்தம் செய்த தொகை குறித்து கேட்டு, உரிய ஆவணங்களை ஆசிரியர்கள் காண்பித்தனர். இதுகுறித்து ஆசிரியர்கள் 5 பேர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடராஜனிடம் புகார் அளித்தனர். இதையடுத்து தணிக்கைக்குழு அதிகாரிகள் கணக்குகளை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, போலி ஆவணங்கள் தயாரித்து, ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.29 லட்சம், சூளகிரி உதவி தொடக்க அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் பாலமுரளி என்பவருடைய கணக்கில் செலுத்தியிருப்பது தெரியவந்தது. அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், உதவி தொடக்க அலுவலர் பிரேம்ஆனந்த், மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுதொடர்பான அறிக்கையை கலெக்டர் கதிரவன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களிடம் அதிகாரிகள் சமர்ப்பித்தனர். இதையடுத்து சென்னை தொடக்க கல்வி இயக்குனருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில், ஓசூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் பிரேம்ஆனந்த் மற்றும் இளநிலை உதவியாளர் பாலமுரளி ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கல்வித்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்