சென்னை வங்கியில் வைக்கப்பட்டு இருந்த நடிகை சுருதியின் ரூ.15 லட்சம் நகைகள் பறிமுதல்

நடிகை சுருதி, சென்னை வங்கியில் வைத்து இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2018-02-08 03:01 GMT
கோவை,

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சுருதி (வயது21). இவர் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அந்த படம் வெளிவரவில்லை. தாய் சித்ரா, தம்பி சுபாஷ், வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு மோசடியில் ஈடுபட்டார். வெளிநாட்டில் அதிக சம்பளத்தில் வேலை பார்க்கும் என்ஜினீயர்கள் திருமணத்துக்கு பெண் தேடுவதை அறிந்து, அவர்களை திருமணம் செய்வதாக சுருதி ஆசை வார்த்தை கூறுவார். பின்னர் நேரில் சந்தித்து அன்பாக பழகுவார்.

வாலிபர்களிடம் லட்சக்கணக்கில் பணம், நகையை பறித்துக்கொண்டு தன்னுடைய தாய்க்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், திருமணம் தள்ளிப்போவதாகவும் கூறி ஏமாற்றுவார். இவ்வாறு ஏராளமான வாலிபர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளார்.

கோவை சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுருதி உள்பட 4 பேரை கைது செய்தனர்.

கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்வதாக கூறி, சுருதி ஏமாற்றி பணம் பறித்ததாக நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சந்தோஷ்குமார் கொடுத்த புகாரின்பேரில், சுருதி, பிரசன்ன வெங்கடேஷ், தாயார் சித்ரா ஆகிய 3 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

பலரிடம் சுருட்டிய பணம் மற்றும் வாங்கிய சொத்து ஆவணங்களை கைப்பற்ற கோவை நகர தனிப்படை போலீசார் சென்னை சென்று சுருதியின் வங்கி கணக்கை சோதனையிட்டனர்.

இதையடுத்து அவரது பெயரில் வங்கி லாக்கரில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள 62 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றை நேற்று போலீசார் கோவை கொண்டு வந்தனர். இந்த நகைகள் கோவை கோர்ட்டில் ஒப்படைக்கப்பட உள்ளது. இதேபோல் வேறு வங்கிகளில் சுருதியின் கணக்கில் நகை, பணம் உள்ளதா? என்று போலீசார் சோதனை நடத்தி வரு கிறார்கள்.

நாகப்பட்டினத்தில் ஒரு வாலிபரை மோசடி செய்த வழக்கிலும் நடிகை சுருதி கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஆவணங்கள் கோவை சிறை அதிகாரியிடம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் சுருதியின் தாய் சித்ரா, உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் செய்திகள்