எஸ்.புதூர் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்; கலெக்டர் ஆய்வு

எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு கலெக்டர் லதா ஆய்வு செய்தார்.

Update: 2018-02-08 03:02 GMT
எஸ்.புதூர்,

எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தோட்டக்கலை துறை, தோட்டக்கலை மலைப்பகுதிகள் துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் கால்நடை வளர்ப்பு துறை ஆகியவற்றின்கீழ் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் லதா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி பொன்னடப்பட்டியில் தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்படும் சந்தை விற்பனை செய்யும் சிப்பம் கட்டும் அறை, வேளாண் எந்திர வாடகை மையம், காய்கறி வளர்ப்பு, பழ மரங்களில் மகரந்த சேர்க்கை ஊக்குவிப்பு மற்றும் மகசூல் அதிகம் பெறுவதற்கு தேனீ வளர்ப்பு, மனியாரம்பட்டியில் தேசிய தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சொட்டுநீர் பாசன முறையில் மா மரக்கன்றுகள் வளர்ப்பு, வாராப்பூரில் பந்தல் சாகுபடி முறை மற்றும் பரப்பு விரிவாக்கத்தில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய், தானிய விவசாயத்தையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் அரியாண்டிபட்டியில் தோட்டக்கலை துறை மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள உழவர் ஆர்வலர் கூட்டுப்பண்ணை திட்டத்தின்கீழ் மிளகாய் உற்பத்தியாளர் குழுக்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம் கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் வேளாண் பொறியியல் துறை மூலம் நீடித்த மானாவாரி விவசாயத்திற்காக மணலூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணை மற்றும் கால்நடை துறை சார்பில் எஸ்.புதூரில் அமைக்கப்பட்டுள்ள நாட்டுக்கோழி பண்ணை வளர்ப்பு முறைகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கலெக்டர் உடன் வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், தோட்டக்கலை இயக்குனர் அழகுமலை, தோட்டக்கலை அலுவலர் ரேகா, உதவி அலுவலர் மனோஜ்குமார், கால்நடை துறை துணை இயக்குனர் கருணாகரன், உதவி இயக்குனர் முகமது நாசர் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்