‘18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்புக்கு பின் அரசியல் மாற்றம் ஏற்படும்’- தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

‘18 எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க வழக்கு தீர்ப்புக்கு பின் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படும்’ என்று திண்டுக்கல்லில் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

Update: 2018-02-08 03:15 GMT
திண்டுக்கல்,

டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் விரைவில் தீர்ப்பு வரஇருக்கிறது. அந்த தீர்ப்புக்கு பின்னர் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் ஜெயலலிதா அரசு அமையும். தமிழகத்தில் ஊழல் அரசு நடந்து கொண்டு இருக்கிறது. எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். பஸ் கட்டண உயர்வால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். தற்போது உள்ளாட்சி தேர்தல் வந்தால், ஒரு இடத்தில் கூட அவர்களால் வெற்றிபெற முடியாது. எனவே, உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் கடத்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

எங்களுடன் இருக்கும் நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கி வருகிறார்கள். அந்த பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்ததும், ஏராளமான நிர்வாகிகள் மட்டுமின்றி அமைச்சர்களும் எங்களுடன் வந்து விடுவார்கள்.

நீட் தேர்வு பிரச்சினையால் மாணவி அனிதா மரணம் அடைந்தார். அதேபோல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு வந்து சென்ற 16 பேர் விபத்தில் இறந்துள்ளனர். அங்கெல்லாம் செல்லாத முதல்-அமைச்சர், மதுரையில் கிடா வெட்டு விருந்தில் கலந்து கொள்கிறார். மக்கள் வேதனையில் தவித்து கொண்டு இருக்கும்போது அவர்கள், விமானத்தில் வந்து விருந்தில் பங்கேற்கிறார்கள். இதுபோன்று எங்கும் நடைபெறாது.

திருச்செந்தூர் கோவிலில் மண்டபம் இடிந்த விபத்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிபத்து என அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களால் அரசுக்கு நல்ல அறிகுறியாக தெரியவில்லை. டி.டி.வி. தினகரன் முதல்-அமைச்சராக வேண்டும் என்பதே எங்கள் 18 பேரின் விருப்பம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்