மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இதனால், அலுவலகங்கள் வெறிச்சோடின. பணிகள் பாதிக்கப்பட்டன.

Update: 2018-02-08 03:09 GMT
சேலம்,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு ரூ.9,300 ஊதியம் வழங்க வேண்டும், ஊதிய மாற்றத்தில் 21 மாத நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், தாசில்தார்களுக்கு ரூ.1,000 தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு முழுவதும் தற்செயல் விடுப்பு எடுத்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், சேலம் தெற்கு, சேலம் மேற்கு, வாழப்பாடி, ஆத்தூர், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி உள்பட 13 தாலுகா அலுவலகங்கள், சேலம், ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர் ஆகிய 4 கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் 450 அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தனர்.

இதனால், அலுவலர்கள் யாரும் அரசு அலுவலகங்களுக்கு செல்லவில்லை. ஊழியர்கள் இன்றி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்செயல் விடுப்பு எடுத்து திரண்ட அலுவலர்கள் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் போராட்டம் நடத்தினர். செயலாளர் அர்த்தநாரி, இணை செயலாளர்கள் வள்ளிதேவி, செம்மலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட செயலாளர் அர்த்தநாரி கூறுகையில்,“எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே கடந்த மாதம் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தினோம். அதன் பின்னரும் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை. வருவாய்த்துறையில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்புவதற்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அடுத்த கட்டமாக 2 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுத்து பணியை புறக்கணித்து உள்ளோம். எங்களது தற்செயல் விடுப்பு காரணமாக வருவாய்த்துறை சார்பில் நடக்கும் ஸ்மார்ட்கார்டு வழங்கும் பணி, சாதி சான்றிதழ் வழங்கும் பணி, பட்டா மாறுதல் மற்றும் டி.என்.பி.எஸ்.இ தேர்வு தொடர்பான முன்னேற்பாடு பணிகள், தேர்தல் தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாகவும் தற்செயல் விடுப்பு எடுத்து வேலைநிறுத்த போராட்டம் தொடரும்” என்றார். 

மேலும் செய்திகள்