ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கலெக்டர், உதவி கலெக்டர் மற்றும் தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடியதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

Update: 2018-02-08 03:35 GMT
தூத்துக்குடி,

தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், வருவாய்த்துறையில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று 2 நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தை தொடங்கினர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நடந்த இந்த போராட்டத்தில், மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, திருச்செந்தூர், விளாத்திகுளம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அலுவலகங்கள், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் சுமார் 350 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து அலுவலர்கள் பணிக்கு வராததால் தாலுகா அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி கிடந்தன. இதனால் வருவாய்த்துறை மூலம் பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இன்று(வியாழக்கிழமை) 2-வது நாள் போராட்டம் நடக்கிறது. 

மேலும் செய்திகள்