வெளியிடங்களில் தங்கியிருக்கும் அகதிகள் குறித்து போலீசார் விசாரணை

கும்மிடிப்பூண்டி முகாமில் பதிவு பெற்று வெளியிடங்களில் தங்கி உள்ள அகதிகள் குறித்து கியூ பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-02-08 22:00 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், திரிகோணமலை, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை,  முல்லைத்தீவு மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்து அகதிகளாக வந்த 918 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 868 தமிழர்கள் தங்கி உள்ளனர்.  இங்கு பதிவில் உள்ளவர்கள் அனுமதியின்றி வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தமிழர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாதம் தோறும் அரசு உதவித்தொகையாக  ரூ.23 லட்சம் கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள அதற்கான துறை அதிகாரிகளால் வங்கி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் முகாம் பதிவில் உள்ள  சிலர், எந்தவித முன்அறிவிப்பும் இன்றி சென்னையின் புறநகர் பகுதிகளிலும்,  கும்மிடிப்பூண்டியை சுற்றி உள்ள  பல்வேறு பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இதுதவிர உரிய அரசு பதிவின்றியும் பலர் முகாமில் தங்கி உள்ளனர். மேற்கண்ட தகவல்  மாவட்ட கியூ பிரிவு போலீசாரின் விசாரணையில்
தெரியவந்துள்ளது. தற்போது முகாம் பதிவில் உள்ள  30 குடும்பங்களை சேர்ந்த சுமார் 80 பேர் வெளியிடங்களில் வசித்து வருவது கண்டறியப்பட்டு உள்ளது.

முகாமில் உதவிப்பணம் வழங்கப்படும் போதும், போலீசாரின் ஆய்வு நடைபெறும்போதும் எப்படியோ முன்கூட்டியே தகவலறிந்து அவர்கள் வெளியிடங்களில் இருந்து முகாமிற்கு வந்து விடுகின்றனர். மேலும், எப்போதும் போல அவர்கள் தங்களை முகாமில் தங்கி இருப்பது போல அதிகாரிகளிடம் அடையாளப்படுத்தி கொள்கிறார்கள். இதற்கு ஒரு சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

முகாம் பதிவை பெற்று உள்ள நிலையில் உரிய அனுமதியின்றி வெளியிடங்களில் தங்கி உள்ள இத்தகைய நபர்களின் முழுமையான செயல்பாடுகளை கண்டறிவதில் மாவட்ட கியூ பிரிவு போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் முகாம் பதிவு பெற்று முகாமில் இல்லாமல் வெளியிடங்களில் தங்கி உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள் எந்த ஆண்டு முகாம் பதிவு பெற்றனர்? வெளிடங்களில் எத்தனை  மாதங்களாக தங்கி உள்ளனர்? அதற்கான உரிய அனுமதி அவர்களிடம் உள்ளதா? சென்னையின் புறநகர் பகுதிகளில் எங்கு வசிக்கின்றனர்? அவர்களின் செயல்பாடுகள் என்ன? என்பது போன்ற விவரங்களை மாவட்ட கியூ பிரிவு போலீசார் தொடர்ந்து ரகசியமாக விசாரித்து  வருகின்றனர்.

இதன் அடிப்படையில் மேற்கண்ட நபர்களின் முகாம் பதிவை ரத்து செய்வது அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக அகதிகள் துறை சார்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்