அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா?

அம்பத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுமா? என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Update: 2018-02-08 22:15 GMT
அம்பத்தூர்,

சென்னை அம்பத்தூர் எஸ்டேட் அருகில் 28 ஏக்கர் பரப்பளவில் மாநிலத்திலேயே பெரிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.) செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களுக்கு பிளம்பர், பிட்டர், எலக்ட்ரீசியன், எந்திரம் பராமரிப்பு, மோட்டார் பழுது நீக்குதல், பராமரிப்பு என 20 வகை பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பின்னர் அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. மேலும் பயிற்சி முடித்தவர்களுக்கு ஐ.டி.ஐ. மூலமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. 54 செயல்முறை பயிற்சி அளிக்கும் தொழிற்பட்டறைகளுடன் கூடிய இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 800 மாணவ–மாணவிகள் வரை பயின்று வருகின்றனர்.

இங்கு பயிலும் மாணவர்களுக்கு புத்தகம், சீருடை, பஸ் பாஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.500–ம், விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் ஆகியவையும் அரசு வழங்குகிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயிலும் இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் கடந்த சில வருடங்களாக அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படுவதில்லை என்று மாணவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். 800 மாணவ–மாணவிகள் பயிலும் இந்த பயிற்சி நிலையத்தில் குடிநீர், கழிவறை, கேண்டீன், போதுமான இருக்கை வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தருவதில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் மாதாந்திர உதவித்தொகையும் சரிவர வழங்குவதில்லை எனவும், அனைத்தும் இலவசம் என கூறி வந்த நிலையில் ‘புராஜக்ட் ஒர்க்’ என்ற பெயரில் ரூ.800 செலுத்த வேண்டும் என சில ஆசிரியர்கள் மாணவர்களை கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. இலவச சீருடையும் குறிப்பிட்ட காலத்தில் வழங்கப்படுவதில்லை என்றும், மாணவர்களே தங்கள் சொந்த செலவில் சீருடைகளை வாங்கிக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தப்படுவதாகவும் சில மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் பயிற்சி நிலையத்தில் விடுதி வசதி இருந்தும் தரமான உணவு வழங்காத காரணத்தால் வெறும் 60 மாணவர்கள் மட்டுமே அங்கு தங்கி உள்ளதாக தெரிகிறது. சுற்றுச்சுவர் பல இடங்களில் சேதம் அடைந்து உள்ளது. இதனால் வெளி ஆட்கள் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்திற்குள் சர்வசாதாரணமாக நடமாடுகிறார்கள். மேலும் கால்நடைகளும் சுற்றித்திரிகின்றன. இதனால் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.

இப்படி பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் ஆரம்பத்தில் ஆர்வமாக படிக்க வரும் மாணவர்கள் இடையிலேயே தங்கள் படிப்பை நிறுத்தி விட்டு சென்று விடுகிறார்கள்.

இது குறித்து பயிற்சி நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சில குறைபாடுகள் இருப்பது உண்மை தான். ஆசிரியர்கள், ஊழியர்கள் குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள். இங்குள்ள குறைகள் அனைத்தும் சரி செய்யப்படும்’ என தெரிவித்தனர்.

அதிகாரிகளும், அரசும் நடவடிக்கை எடுத்து அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தந்து சிரமம் இன்றி கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்