காதலனுடன் 7 மாதம் சேர்ந்து வாழ்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை, உறவினர்கள் சாலைமறியல்

கடலூரில் காதலனுடன் சேர்ந்து வாழ்ந்த இளம்பெண் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-02-13 21:45 GMT
கடலூர்,

காதலனுடன் 7 மாதம் சேர்ந்து வாழ்ந்த இளம்பெண், திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இளம் பெண்ணின் உறவினர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மார்க்கெட் காலனியைச்சேர்ந்த சேகர் என்பவருடைய மகள் ஜெயஸ்ரீ(வயது22). இவர் கடலூரில் உள்ள மருந்துக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரும் நெல்லிக்குப்பம் வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்த காமராஜ் என்பவருடைய மகன் மருதுவும்(22) ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஜெயஸ்ரீ, தனது வீட்டை விட்டு வெளியேறி மருதுவின் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு அவர் திருமணம் ஆகாமல் காதலருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அவரை மருதுவின் குடும்பத்தினர் வரதட்சணை வாங்கி வரக்கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜெயஸ்ரீ, நேற்று முன்தினம் இரவில் மருதுவின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அவரது தந்தை சேகர் நெல்லிக்குப்பம் போலீசில் நேற்று புகார் செய்தார். புகாரில், தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக சேகர் கூறியிருந்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்தார்.

இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ஜெயஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி அறிந்த ஜெயஸ்ரீயின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்குக்கு திரண்டு வந்திருந்தனர். அவர்கள் ஜெயஸ்ரீயின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று மதியம் 1 மணி அளவில் அரசு ஆஸ்பத்திரி எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தினார்கள்.

 இதையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதன்பிறகு ஜெயஸ்ரீயின் உடலை கோட்டாட்சியர் தினேஷ் பார்வையிட்டு பிரேத விசாரணை நடத்தினார். வரதட்சணை கொடுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்