ஊட்டியில் மலை சரிவான பகுதியில் 490 மரங்களை வெட்ட அனுமதி

ஊட்டியில் மலை சரிவான பகுதியில் 490 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-02-19 22:00 GMT
ஊட்டி,

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ளது நீலகிரி மாவட்டம். இங்கு 65 சதவீதம் வனப்பகுதிகள் உள்ளன. மாவட்டத்தில் முதுமலை, சீகூர், சிங்காரா, கூடலூர், ஓவேலி, தொட்டபெட்டா, பைக்காரா ஆகிய வனச்சரகங்கள், கோத்தகிரியை ஒட்டியுள்ள வடகிழக்கு பகுதி, மஞ்சூர், முக்குருத்தி, அவலாஞ்சி, அப்பர்பவானி, வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் (மேற்கு நீர்ப்பிடிப்பு பகுதி) ஆகிய வனப்பகுதிகள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தை, காட்டு யானை, கரடி, கடமான், புள்ளிமான், காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் மற்றும் பல்வேறு வகையான பாம்புகள், பறவைகள் வாழ்ந்து வருகின்றன.

வனப்பகுதிகளில் தேக்கு, வெண் தேக்கு, நாவல், பலா, காட்டுப்பலா, அயனி பலா, ஈட்டி போன்ற விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. மேலும் வனப்பகுதியில் கற்பூரம், ப்ளுகாம், சாம்ராணி, சீகை உள்ளிட்ட மரங்களும் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குறு, சிறு விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகள் தங்களது தேயிலை தோட்டத்தில், தேயிலை செடிகளுக்கு நிழல் தரும் வகையில் சில்வர் ஓக் மரங்களை வளர்த்து உள்ளனர். தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்துக்கு சொந்தமான குன்னூர், கோத்தகிரி, நடுவட்டம், சேரங்கோடு, கொளப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் டேன்டீ நிர்வாகத்தினர் சில்வர் ஓக் மரங்களை வளர்த்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான இடங்களிலும், அரசுக்கு சொந்தமான இடங்களிலும் மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் அனுமதி பெற வேண்டும். தேயிலை தோட்டங்களில் உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அரசு மூலம் விதிக்கப்பட்டு உள்ளது. சில்வர் ஓக் மரங்களை அனுமதி பெற்று வெட்டினாலும், வனத்துறையின் பார்ம்-2 பெற்ற பின்னரே வெட்டப்பட்ட மரங்களை வெளியே கொண்டு செல்ல முடியும்.

தற்போது, நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கட்டிட விதிமுறைகள் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி, சரிவான மற்றும் செங்குத்தான இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி இல்லை. மேலும் ஆழ்குழாய் கிணறு அமைக்க மற்றும் பொக்லைன் எந்திரம் பயன்படுத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், மாவட்ட கலெக்டரின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்று அனுமதி பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஊட்டி சர்ச்ஹில் பகுதியில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10 ஏக்கர் நிலத்தில் மலை சரிவான பகுதியில் 490 கற்பூர மற்றும் சாம்ராணி மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு அனுமதி அளித்து உள்ளது. அந்த மரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கான எண் மரங்களில் போடப்பட்டு தனியார் ஒப்பந்ததாரர் மூலம் மரங்களை வெட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரே இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த 490 மரங்கள் வெட்டப்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தின் அழகை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தை அரசுத்துறை கண்டு கொள்ளாமல், 490 மரங்களை வெட்ட அனுமதி அளித்து உள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது. சாதாரண விவசாயிகள் தங்களது பட்டா நிலத்தில் நட்ட சில்வர் ஓக் மரங்களை வெட்ட வேண்டும் என்றால், பல முறை ஆய்வு செய்தாலும் மரங்களை முழுமையாக வெட்ட வனத்துறை அனுமதி அளிப்பது இல்லை. மேலும் அரசுக்கு சொந்தமான தேயிலை தோட்டக்கழகத்தில் தேயிலை செடிகளுக்கு நோய் ஏற்படுத்தக்கூடிய சில்வர் ஓக் மரங்களை வெட்டி அகற்ற அரசு நடவடிக்கை எடுத்த போது, அரசியல் கட்சியினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பால் மரங்கள் வெட்டுவது நிறுத்தப்பட்டது.

ஊட்டி காக்காதோப்பு பகுதியில் மாவட்ட நீதிமன்றம் அமைக்கும் இடத்தில் நீதிபதிகளின் உத்தரவுப்படி, ஒரு பகுதியில் மரங்கள் வெட்டப்படாமல் பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. குன்னூரில் ஒரு கோவில் அருகே உயர் மின்னழுத்தம் கொண்ட மின் ஒயர் மரக்கிளைகளில் உரசி செல்வதால் ஆபத்து ஏற்படுவதாக கூறி, கோவிலுக்கு பாதுகாப்பாக ஓரிரு மரங்களை வெட்டியதற்கு வருவாய்த்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால், ஊட்டி சர்ச்ஹில் பகுதியில் ஒரே இடத்தில் காவல்துறையினருக்கு பயிற்சி மைதானம் அமைப்பதாக கூறி மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலை பாதிக்கும்.

எனவே, நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்கள் வெட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, மரங்கள் வெட்டுவதை முழுமையாக தடுக்க வேண்டும் அல்லது படிப்படியாக மரக்கன்றுகள் நட்டு வளர்ந்தபிறகு வெட்ட அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்