பெண் ஊழியர் மீது திராவகத்தை ஊற்றி தீ வைத்தவர் கைது

வானுவம்பேட்டையில் ரத்த பரிசோதனை மையத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் மீது திராவகத்தை ஊற்றி தீ வைத்த உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்

Update: 2018-02-20 00:00 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த புழுதிவாக்கம் சிவபிரகாஷம் நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 38). தனியார் கால்டாக்சி டிரைவர். இவருடைய மனைவி யமுனா (33). இவர் வானுவம்பேட்டையில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை மையத்தில் பரிசோதனையாளராக பணியாற்றி வருகிறார்.

சென்னை அண்ணாநகரை சேர்ந்த ராஜா (40) என்பவர் இந்த பரிசோதனை மையத்தின் உரிமையாளராக உள்ளார். நேற்று முன்தினம் மாலை ரத்த பரிசோதனைக்கான அறிக்கை தயாரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக யமுனாவிற்கும், ராஜாவிற்கும் கடுமையான வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வந்து விசாரித்தனர். உடனே ராஜா பிரச்சினை ஒன்றும் இல்லை என்று கூறி அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

அவர்கள் சென்றதும் மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ராஜா அங்கிருந்த ஒருவித திராவகத்தை(ஆசிட்) எடுத்து யமுனா மீது ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகிறது. ரத்த பரிசோதனை மையத்தில் தீப்பிடித்து எரிவதை கண்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதில் யமுனா பலத்த தீக்காயங்களுடன் இருந்தார். ராஜாவிற்கும் கையில் லேசான காயம் ஏற்பட்டு இருந்தது. உடனே யமுனாவை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ராஜா லேசான காயங்களுடன் அண்ணாநகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் கோவிந்தராஜ், இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யமுனாவிடம் விசாரித்தனர்.

அப்போது யமுனா கூறுகையில், “குடும்ப சூழ்நிலை காரணமாக ராஜாவின் ரத்த பரிசோதனை மையத்தில் பணியாற்றி வருகிறேன். மருத்துவ அறிக்கைகள் தயாராக இருக்கிறதா என்று கூறி என்னிடம் தகராறு செய்தார். மேலும் என்னைப் பற்றி அவர் தவறாக பேசுவதையும் தட்டி கேட்டேன். இதில் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதும் அங்கிருந்த திராவகத்தை எடுத்து என் மீது ஊற்றி தீவைத்தார். என்னை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்” என்று தெரிவித்தார். அவர் 50 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து மடிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்து தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை மாஜிஸ்திரேட்டு கார்ல் மார்க்ஸ் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ராஜா சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்