குன்னூர் அருகே மனைவி இறந்ததால் விரக்தி: கிணற்றில் குதித்து முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

குன்னூர் அருகே மனைவி இறந்ததால் விரக்தி அடைந்த முன்னாள் ராணுவ வீரர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-02-19 21:45 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பழைய அருவங்காடு நேரு நகரை சேர்ந்தவர் தீபக் (வயது 40) முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி அன்னம்மாள் ஷீலா. இவர்களுக்கு ஆலிஸ்டர், ஷேலிஸ்டர் ஆகிய 2 மகன்கள் உண்டு. இவரது மனைவி அன்னம்மாள் ஷீலா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதனால் மனஉளைச்சலின் காரணமாக அவர் விரக்தியில் இருந்து வந்தார். தனது இரு மகன்களையும் கூடலூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் விட்டு, விட்டு நேரு நகரில் தீபக் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தீபக்கை காணவில்லை. அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் உப தலை ஊராட்சிக்கு சொந்தமான 40 அடி கிணற்றில் தீபக் பிணமாக மிதந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து அருவங்காடு போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த குன்னூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் மிதந்த தீபக்கின் பிணத்தை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அங்கு வந்த அருவங்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், தீபக் தனது மனைவி இறந்ததால் பிள்ளைகளை கவனிக்க முடியாமல் விரக்தியில் இருந்ததாகவும், அதனால் மனம் உடைந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்