மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி

தேனியில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.

Update: 2018-02-19 22:00 GMT
தேனி,

தேனி அல்லிநகரம் கம்பர்தெருவை சேர்ந்தவர் குருநாதன். கூலித்தொழிலாளி. அவருடைய மகன் மணிகண்டன் (வயது 19). இவர், நாமக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 2-வது ஆண்டு படித்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு இவர் வந்திருந்தார்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் மகன் பாண்டி (21), இளங்கோ தெருவை சேர்ந்த பாண்டி மகன் வினோத் (20) ஆகியோரும் நண்பர்கள். பாண்டியும், வினோத்தும் திருப்பூரில் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையில் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் 2 பேரும் ஊருக்கு வந்திருந்தனர்.

நேற்று காலையில் மணிகண்டன், பாண்டி, வினோத் ஆகியோர் ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் தேனிக்கு வந்துள்ளனர். தேனி- பெரியகுளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தது.

அந்த சமயத்தில், பெரியகுளம் அருகே மதுராபுரியில் இருந்து பருத்தி விதை மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தேனி நோக்கி ஒரு லாரி வந்தது. தேனியில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகம் எதிரே வந்த போது லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் நிலை தடுமாறி லாரியின் பின் சக்கரத்தின் முன்பு விழுந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில், 3 பேர் மீதும் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பொதுமக்கள் குவிந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதற்கிடையே பலியான 3 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர், அவர்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேனியை அடுத்த டொம்புச்சேரியை சேர்ந்த லாரி டிரைவர் கருப்பையா (32) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்