குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

ஆரணியில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-19 23:00 GMT
ஆரணி,

ஆரணி நகராட்சி 1-வது வார்டில் அருந்ததிபாளையம் குடியிருப்பு ஆற்று பாலம் அருகே உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை நகராட்சியில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சுமார் 8 மணியளவில் ஆரணியில் இருந்து வேலூர் செல்லும் மெயின் ரோட்டில் காலிகுடங்களுடனும், குடிநீர் தொட்டியுடனும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நகராட்சி அலுவலர்களிடம் பேசி குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதன் காரணமாக வேலூர்- ஆரணி மெயின் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்