நாராயணசாமியின் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்: சாமிநாதன் பதிலடி

முதல்-அமைச்சர் நாராயணசாமியின் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன் என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன் கூறினார்.

Update: 2018-02-19 22:45 GMT
புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

தனிநபர் விமர்சனம் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கருத்து கூறியுள்ளார். அதுபற்றி கூற அவருக்கு தகுதியில்லை. புதுவையில் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்குவேன் என்று அவர் பலமுறை கூறியுள்ளார். புதுவை சட்டசபையில் கவர்னரை பற்றி அவரும், அவர் கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஒருமையில் பலமுறை பேசியுள்ளனர். இது சட்டமன்ற பதிவிலும் உள்ளது.

நான் கடந்த 25 வருடமாக பாரதீய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருகிறேன். நான் எந்த கூட்டத்திலும் சாதிகளை விமர்சித்து பேசியதில்லை. அப்படி பேசி இருந்தால் நான் பதவி விலகவும் தயாராக உள்ளேன். அதை நிரூபிக்காவிட்டால் முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அவரது கட்சி எம்.எல்.ஏ.க்களும் பதவி விலக தயாரா?

பல போராட்டங்கள், வழக்குகளை சந்தித்தவன் நான். எனவே நாராயணசாமியின் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன். விஜயவேணி எம்.எல்.ஏ.வின் கணவர் மீதான குற்றச்சாட்டு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் தொடர்பான பிரச்சினைகளை திசை திருப்ப இதை எழுப்பி உள்ளனர். பிரதமர் புதுவை வரும் சமயத்தில் பாரதீய ஜனதா கட்சியை களங்கப்படுத்த இப்போது திட்டமிட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி கள்ளச்சாராய வியாபாரிகள், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களுக்கு ஆதரவாக உள்ளது. முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது கோபத்தை பாப்ஸ்கோ ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட செய்வதில் காட்டவேண்டும். அவருக்கு நாகரீகம் பற்றி பேசும் தகுதி இல்லை. புதுவை ஆட்சியாளர்களின் ஊழல் பற்றி புதுவை வரும் பிரதமரிடம் புகார் அளிப்போம்.

இவ்வாறு சாமிநாதன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘புதுவை மாநிலத்தில் நகராட்சி கடைகளுக்காக வாடகை மற்றும் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. குப்பை வரியும் விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) வணிகர்கள் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்துக்கு பாரதீய ஜனதா தனது ஆதரவை தெரிவித்துக்கொள் கிறது’ என்றார்.

மேலும் செய்திகள்