ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு

ராசிபுரத்தில் ரூ.42 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் சரோஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2018-02-19 22:00 GMT
ராசிபுரம்,

ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வீட்டு வசதி வாரிய பூங்கா அருகே ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து வீட்டு வசதி வாரிய பூங்கா அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் சரோஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து புதிய பூங்கா அமைக்கும் இடத்தையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார், ராசிபுரம் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் ஆர்.பி.சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கான ஆயத்த பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24-ந்தேதி புதிய கட்டிடத்திற்கான பூமிபூஜை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் பாதாள சாக்கடை திட்டங்களில் விடுபட்ட இடங்களை இணைப்பது குறித்தும், பழைய பஸ் நிலையத்தில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய வணிக வளாகம் கட்டவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் சரோஜா ஆலோசனை வழங்கினார்.

மேலும் செய்திகள்