3 நாள் சுற்றுப்பயணமாக அமித்ஷா மங்களூரு வந்தார்

3 நாள் சுற்றுப்பயணமாக மங்களூரு வந்த அமித்ஷா, நேற்று குக்கே சுப்பிரமணியா கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2018-02-19 23:00 GMT
மங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா, கர்நாடக கடலோர மாவட்டங்களில் 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று (திங்கட்கிழமை) டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு அமித்ஷா மங்களூரு பஜ்பே விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு விமான நிலையத்தின் வெளியே பா.ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அவர் கார் மூலம் புறப்பட்டு குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சென்றார். அவருக்கு வழிநெடுகிலும் பா.ஜனதா தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். குக்கே சுப்பிரமணியா கோவிலில் சாமி தரிசனம் செய்த அமித்ஷா பின்னர் மங்களூருவில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார்.

இதனை தொடர்ந்து இன்று(செவ்வாய்க்கிழமை) மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். பின்னர் பண்ட்வாலுக்கு செல்லும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதையடுத்து மங்களூருவுக்கு வரும் அமித்ஷா, காட்டிபள்ளா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட பா.ஜனதா தொண்டரான தீபக் ராவ் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு உடுப்பிக்கு செல்லும் அவர் மாலையில் மல்பே பகுதியில் நடக்கும் மீனவர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அதன்பின்னர் அமித்ஷா உடுப்பியில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு விசுவேஸ்வர தீர்த்தசாமியை சந்தித்து ஆசி பெறுகிறார். மேலும் சமூக ஆர்வலர் ஒருவரையும் சந்திக்கிறார். பின்னர் பா.ஜனதா கட்சிக்கான இணையதளம் ஒன்றையும் தொடங்கி வைக்கிறார். இதையடுத்து இன்று இரவு அவர் உடுப்பியில் தங்குகிறார்.

அதன்பின்னர் நாளை(புதன்கிழமை) உடுப்பியில் இருந்து புறப்படும் அமித்ஷா கார்வார் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு ஒன்னாவர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு கொலை செய்யப்பட்ட பா.ஜனதா தொண்டரான பரேஸ் மேஸ்காவின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறார். இதையடுத்து அவர் உப்பள்ளிக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதையடுத்து நாளை இரவு அவர் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு உப்பள்ளியில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். தேர்தலையொட்டி அமித்ஷா வருகை தந்து உள்ளதால் தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் மாவட்ட பா.ஜனதாவினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அமித்ஷாவை வரவேற்கும் வகையில் தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் மாவட்டங்களில் வழிநெடுகிலும் பா.ஜனதா கொடி கட்டப்பட்டு உள்ளது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் காவி மயமாக காட்சி அளிக்கிறது.

மேலும் செய்திகள்