விஷம் குடித்து உயிருக்கு போராடிய வாலிபர் சாவு

ஒருமணி நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால், விஷம் குடித்து உயிருக்கு போராடிய வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-02-19 22:15 GMT
தானே,

தானே மாவட்டம் பிவண்டியில் வசித்து வந்த வாலிபர் காசிநாத் பவார்(வயது22). சம்பவத்தன்று இவர் தனது அண்ணனுடன் ஏற்பட்ட சண்டையில் கோபம் அடைந்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அங்குள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் டாக்டர்கள் அவரை தானே மாநகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர்.

இதையடுத்து உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் ஒரு மணி நேரமாகியும் வரவில்லை. இதனால் காசிநாத் பவார் உயிருக்கு போராடினார்.

இதையடுத்து லாரி ஒன்றில் அவரை ஏற்றிக்கொண்டு காசிநாத் பவாரின் குடும்பத்தினர் தானே மாநகராட்சி மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்திரா காந்தி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் ஒரு மணி நேரம் வரை காக்க வைக்கப்பட்டது தான் காசிநாத் பவார் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுபற்றி இந்திரா காந்தி நினைவு மருத்துவமனை கண்காணிப்பாளர் அனில் தோரட் கூறுகையில், “எங்களிடம் உள்ள 4 ஆம்புலன்சுகளில் இரண்டு பராமரிப்புக்கு அனுப்பப்பட்டு உள்ளன. மற்ற இரண்டும் நல்ல நிலையில் இல்லை. எனவே 108 ஆம்புலன்சை அழைத்தோம்.

ஆனால் அந்த ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதால் வர இயலவில்லை. இருப்பினும் நாங்கள் காசிநாத் பவாரை லாரியில் கொண்டு செல்லும்படி கூறவில்லை” என்றார்.

மேலும் செய்திகள்