மத்திய அரசை தமிழக பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை தமிழக பா.ஜ.க. வலியுறுத்தி வருகிறது என்று சேலத்தில் பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

Update: 2018-02-19 22:45 GMT
சேலம்,

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது நாடு முழுவதும் வங்கிகளில் ரூ.82 ஆயிரம் கோடி வாராக்கடன் இருந்தது. அதன்பிறகு பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வாராக்கடன்களை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,700 கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் ரூ.6,400 கோடி மதிப்பிலான நகைகள், சொத்துகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. வங்கி மோசடி செய்த நீரவ்மோடி விவகாரத்திற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் அரசு தான். ரிசர்வ் வங்கிக்கு இவ்வளவு நாள் தெரியாமல் போனது எப்படி? இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

இலவசங்கள் அறிவிப்பால் தமிழக அரசின் நிதிநிலை மோசமாக உள்ளது. தமிழக அரசுக்கு ரூ.2.40 லட்சம் கோடி கடன் உள்ளது. போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிலுவை தொகை கொடுக்க வேண்டியுள்ளது. இன்னும் 6 மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்குமா? என்பதே கேள்விக்குறி தான்.

சுகாதாரத்துறையில் பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளன. இந்து சமய அறநிலையத்துறையிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. தமிழகத்தில் உள்ள இந்து கோவில்களுக்கு சொந்தமான பணம் மற்றும் பலகோடி சொத்துகள் சூறையாடப்பட்டு வருகிறது. ஆணையர் முதல் செயல் அலுவலர் வரை அதிகாரிகளின் செயல்பாடு மிக மோசமாகவே உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை தமிழக பா.ஜ.க.வும் வலியுறுத்தி வருகிறது. காவிரி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் கர்நாடக அரசு இனி மேகதாதுவில் அணை கட்ட முடியாது.

மேலும் செய்திகள்