ஆசிரியர்கள் வளர்க்க வேண்டிய திறன்கள்!

மாணவர்கள் எதிர்கொண்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களை சமாளிக்க ஆசிரியர்களுக்கும் தனித்திறன் அவசியமானதாக உள்ளது.

Update: 2018-02-20 07:51 GMT
மாணவர்கள் உலகம் மாறிவிட்டது. புத்திசாலித்தனம் மிகுந்த குழந்தைகளிடம் கற்றல் திறன் அதிகமாக இருந்தாலும் மற்ற பண்புநலன்களில் வினோத மாற்றங்கள் இருக்கவே செய்கிறது. கால மாற்றத்தாலும், பாடச்சுமையாலும், வளர்க்கப்படும் சூழலாலும் அவர்கள் எதிர்கொண்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களை சமாளிக்க ஆசிரியர்களுக்கும் தனித்திறன் அவசியமானதாக உள்ளது. மாணவர்களை நல்வழிப்படுத்தும் லேசான கண்டிப்பு, கட்டுப்பாடு கூட அவர்களை காயப்படுத்துவதும், உணர்ச்சிவசப்பட்டு விபரீத முடிவு எடுக்கத் தூண்டுவதாக இருப்பதையும் சமீப காலமாக பார்த்து வருகிறோம். இன்றைய சூழலில் மாணவர்களை கையாள ஆசிரியர் பெற்றிருக்க வேண்டிய அவசியமான திறன்கள் பற்றி பார்ப்போம்...

* மாணவர்கள் பலவிதமாக இருப்பார்கள். அவர்களின் திறன்களிலும், லட்சியத்திலும், தேவையிலும் மாற்றங்கள் இருக்கும். பாடக்குறிப்புகளைத் தவிர அனைத்தையும் பொதுமைப்படுத்தி கூறுவது இவர்களுக்கு ஏற்புடையதாக இருக்காது. ஒருவருக்கு கணிதப் பாடம் புரிந்து கொள்வது மிகச் சிரமமாக இருக்கலாம். மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதும், மற்றவர் முன்னிலையில் அவமானப்படுத்துவதும் அவரை முன்னேற்றம் அடையச் செய்து விடாது. அவரை தேர்ச்சி பெற வைப்பதற்கான யுத்திகளை தனியே அழைத்து சொல்லிக் கொடுப்பது சிறந்த வழிமுறையாக இருக்கும். எனவே பாடம் கற்பித்தல் பலருக்கும் பொதுவாகவும், நெறிப்படுத்துதல் அவரவர் தன்மைக்கேற்ப தனியேவும் அமைய வேண்டும். 

* தொழில்நுட்பங்கள் பெருகிவிட்டதால், மாணவர்கள் பள்ளியைத் தாண்டிய சூழலில் நிறைய வி‌ஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். தொழில்நுட்பம் சார்ந்த வி‌ஷயங்களில் தங்கள் கருத்துகளையும், கவனத்தையும் குவித்து வைத்திருக்கிறார்கள். ‘படிக்கும் வயதில் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தக்கூடாது’ என்று கண்டிப்பது மட்டும் சிறந்த ஆசிரியரின் பணியல்ல. தொழில்நுட்ப சாதனங்களை எவ்விதமாக அவசியத்திற்குப் பயன்படுத்த வேண்டும், எது எல்லை மீறியது, எது ஆபத்துக்குரியது என்பதை எடுத்துரைக்கும் வல்லமை ஆசிரியருக்கு இருக்க வேண்டும். அதனால் ஆசிரியரும் அடிப்படை தொழில்நுட்ப அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் அளவுக்கு நல்லாசிரியராக திகழ்வது உங்கள் மதிப்பினை உயர்த்தும்.

* தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகம் சுருங்கிவிட்டதால் பாடப்புத்தகங்களைத் தாண்டிய வி‌ஷயங்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். உலகளாவிய வகையில் உங்கள் பாடத்திட்டங்கள் எப்படி செம்மைப்படுத்தப்பட்டுள்ளன, என்ன புதுமை வந்திருக்கிறது, எப்படி போதிப்பது சிறந்த புரிதலுக்கு வழி வகுக்கிறது, மற்ற நாடுகளில் உங்கள் பாடங்கள் எப்படி போதிக்கப்படுகின்றன என்பது போன்ற உலகளாவிய அறிவும், அனுபவமும் இன்றைய புத்திசாலி மாணவர்களை வழி நடத்த அவசியமானதாகும்.

* உதாரணமாக உங்கள் பாடங்களை எளிமைப்படுத்தும், மாணவர்களின் சுமையைக் குறைக்கும் அப்ளிகேசன்களை அறிந்து அவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கலாம். உங்கள் பாடத்திட்டத்தினை டிஜிட்டல் மயமாக்க முன்வரலாம். மாணவர்களுடன் புரிதலை அதிகமாக்க தனியே வலைப்பூ, வாட்ஸப் குழு உருவாக்குதல் போன்ற யுத்திகளையும் கையாளலாம். பாடங்கள் கற்பிப்பதைத் தாண்டி மாணவர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் நட்புறவான நடைகள் அவர்களை எளிதில் கவர்வதுடன், உங்கள் மதிப்பினை உயர்த்தும்.

* கற்றல் திறன் குறைந்த மாணவர்களை காயப்படுத்தும் விதமாக நடந்து கொண்டு திருத்த முடியாது. எனவே எப்போதும் எதிர்மறை பேச்சுகளையும், கட்டுப்பாடுகளையும் தவிர்த்துவிடுங்கள். நேர்மையான நடத்தைகள் எவ்வித மாற்றத்தை விளைவிக்கும் என்பதை உதாரணங்களுடன் விளக்குங்கள், செயல்படுத்திக் காட்டுங்கள். 

* ‘ஆசிரியப் பணி அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி’ என்று கூறுவார்கள். அர்ப்பணிப்பு என்பது என் கடன் போதிப்பது என்பது மட்டுமல்ல. மாணவர் குணமறிந்து, நலனறிந்து நல்வழிப்படுத்துவதே. மாணவர் உலகத்திற்கேற்ப ஆசிரியர்களும் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளத்தான் வேண்டும்!

மேலும் செய்திகள்