தூத்துக்குடி அருகே, முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டி பெண் படுகொலை; கணவரும் படுகாயம் பால் வியாபாரி கோர்ட்டில் சரண்

தூத்துக்குடி அருகே, முன்விரோதத்தில் பெண் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-02-20 20:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே, முன்விரோதத்தில் பெண் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடைய கணவரும் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களை வெட்டிய பால்வியாபாரி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

பாதை தகராறு


தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை மேல தட்டப்பாறையை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 68). விவசாயி. இவருடைய மனைவி சுப்பம்மாள் (55). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் மாரியப்பன் (50). பால் வியாபாரி. இவர்கள் உறவினர்கள்.

இவர்களுக்குள் வீட்டுக்கு அருகே உள்ள நடை பாதையை யார் பயன்படுத்துவது என்பதில் பிரச்சினை இருந்தது. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணையில் உள்ளது. இதில் இரு குடும்பத்தினர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஜெயராஜ், கடந்த 18–ந்தேதி இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாரியப்பன் பாதை பிரச்சினை குறித்து அவரிடம் தகராறு செய்தார். இதில் இருவருக்கும் தகராறு முற்றவே வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அவரை மாரியப்பன் வெட்டினார். அப்போது அதனை தடுக்க வந்த சுப்பம்மாளையும் மாரியப்பன் வெட்டினார். அதன் பின்னர் அவர் அங்கு இருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து தட்டப்பாறை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து மாரியப்பனை தேடி வந்தனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த கணவன், மனைவி 2 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சுப்பம்மாள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு பரிதாபமாக இறந்தார். ஜெயராஜூக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தட்டப்பாறை போலீசார் இந்த சம்பவத்தை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர். இதற்கிடையே மாரியப்பன் கோவில்பட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் 3–வது கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்