‘இந்திய கலாசாரத்தின்படி பெண்களுக்கு கல்வி அளித்தவர் சகோதரி நிவேதிதை’

‘இந்திய கலாசாரத்தின்படி பெண்களுக்கு கல்வி அளித்தவர் சகோதரி நிவேதிதை’ என்று சென்னையில் நடந்த ரதயாத்திரை நிறைவு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.

Update: 2018-02-23 00:00 GMT
சென்னை,

விவேகானந்தரின் சீடரான அயர்லாந்து நாட்டை சேர்ந்த சகோதரி நிவேதிதையின் 150-வது பிறந்த ஆண்டையொட்டி தமிழகத்தில் ரதயாத்திரை நிகழ்ச்சி கடந்த மாதம் 22-ந்தேதி கோயம்புத்தூரில் தொடங்கியது. தொடர்ந்து 30 நாட்கள் இந்த ரதம் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து 3 லட்சம் மாணவிகளை சந்தித்து சாதனை படைத்தது. இந்தநிலையில் சென்னையில் நேற்று இந்த ரதயாத்திரை பயணம் முடிவடைந்தது. இதனுடைய நிறைவு விழா கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் நடந்தது.

கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரதத்தில் இருந்த சகோதரி நிவேதிதையின் சிலைக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மாணவிகளின் கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவுக்கு உலகளாவிய ராமகிருஷ்ண மடம் துணைத்தலைவர் கவுதமானந்த மகராஜ் முன்னிலை வகித்தார்.
பின்னர் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி பேசியதாவது:-

அயர்லாந்து நாட்டை சேர்ந்த சகோதரி நிவேதிதை, நம்நாட்டு விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ராமகிருஷ்ண மடம் அவரது பணிகளை மக்களிடையே கொண்டு சென்றது. பாரதியாருக்கு குருவாகவும் சகோதரி நிவேதிதை விளங்கினார். பாரதியார் ‘புதுமைப்பெண்’ இலக்கியத்தை படைக்க அவர் ஒரு காரணமாக இருந்தார்.

வெளிநாட்டில் பிறந்தவராக இருந்தாலும் ராமகிருஷ்ண இயக்கத்தை மிகவும் அவர் நேசித்தார். பெண்களுக்கு என்று ஒரு பள்ளியை தொடங்கி தன்னுடைய எழுத்துகள் மற்றும் பேச்சுகள் மூலமாக சம்பாதித்த பணத்தை அதற்காக செலவழித்தார். அதில் இந்திய கலாசாரத்தின்படி பெண்களுக்கு கல்வி அளித்தார்.

‘100 இளைஞர்களை என்னிடம் அளித்தால் நாட்டை மாற்றிக்காட்டுவேன்’ என்றார் விவேகானந்தர். ஆனால் சகோதரி நிவேதிதை ரதம் சென்ற பாதையில் 3 லட்சம் மாணவிகளை சந்தித்து உள்ளது. இவர்கள் மூலம் ராமகிருஷ்ண மடம் நாட்டை மாற்றிக்காட்ட வேண்டும்.

அலுவல் பணி காரணமாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் விழாவில் பங்கேற்கவில்லை. இதனால் அவருடைய வாழ்த்து செய்தி விழாவில் வாசிக்கப்பட்டது. விழாவில் உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரம தலைவர் யதீஸ்வரி ராமகிருஷ்ண பிரியாம்பா அருளாசி வழங்கினார்.

முன்னதாக பாபாயி வரவேற்றார். ரதயாத்திரைக்கான மாநில ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன், சென்னை தொலைக்காட்சி இயக்குனர் ஆண்டாள் பிரியதர்ஷினி மற்றும் ரமேஷ் பிரபா உள்ளிட்ட பலர் பேசினர். சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் மேலாளர் விமுர்த்தானந்த மகராஜ், வெள்ளிமலை விவேகானந்தர் ஆசிரமம் சைதன்யானந்த மகராஜ், வி.ஐ.டி. பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்