உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!

அமெரிக்காவில், தன்னைப் பெற்று காப்பகத்தில் ஒப்படைத்த தாய், தன்னுடன் ஒரே நிறுவனத்தில் பணிபுரிவதை 38 ஆண்டுகளுக்குப் பின் ஒரு மகள் அறிந்திருக்கிறார்.

Update: 2018-02-24 07:55 GMT
மெரிக்காவின் ஓகியோ மாநிலத்தைச் சேர்ந்தவர், பிரான்சைன் சிம்மன்ஸ். 14 வயதில் கர்ப்பிணியான இவரை இவரது காதலர் கைவிட்டுச் சென்றுவிட்டதால் காப்பகம் ஒன்றில் சேர்ந்து தனது பதினைந்தாம் வயதில் பெண் குழந்தையைப் பிரசவித்தார்.

அதை வளர்க்க வழி தெரியாமல் தவித்த சிம்மன்ஸ், அந்தக் காப்பகத்தின் பொறுப்பில் மகளை ஒப்படைத்துவிட்டு பிழைப்புத் தேடிச் சென்றுவிட்டார்.

அக்குழந்தைக்கு லா சோன்யா மிச்சல் கிளார்க் என்று பெயர்சூட்டிய காப்பக நிர்வாகிகள், சிறுவயதிலேயே அவளை ஒரு தம்பதிக்கு தத்துக் கொடுத்துவிட்டனர்.

அந்தத் தம்பதியரின் செல்லமகளாக வளர்ந்துவந்த போதிலும் தான் தத்தெடுக்கப்பட்ட பெண் என்பதை அறிந்துகொண்ட மிச்சலுக்கு இப்போது 38 வயதாகிறது. ஓகியோ மாநிலத்தின் யங்ஸ்டவுன் பகுதியில் உள்ள ஒரு கால் சென்டரில் வேலை பார்த்து வருகிறார்.

தன்னைத் தத்தெடுத்தவர்கள் பாசமாக வளர்த்திருந்தாலும், தன்னைப் பெற்ற தாயை எப்போது காண்போம் என்ற ஆதங்கம் எப்போதுமே மிச்சலுக்கு இருந்தது. அதற்கான வழி தெரியாமல்தான் வாடியிருந்தார்.

இந்நிலையில், 1964-ம் ஆண்டுக்கும் 1996-ம் ஆண்டுக்கும் இடையில் ஓகியோ மாநிலத்தில் பிறந்தவர்களின் பட்டியலை அம்மாநில அரசு கடந்த மாதம் வெளியிட்டது. அதில், ஆதரவற்றோர் காப்பகத்தில் பிறந்த மிச்சலின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

அந்தப் பெயருக்கு நேர் எதிரே தாயாரின் பெயர் பிரான்சைன் சிம்மன்ஸ் என்று இடம்பெற்றிருந்தது. அந்தப் பெயரை வைத்து ‘பேஸ்புக்’கில் தேடியபோது மிச்சலுக்கு மாபெரும் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் பணிபுரியும் அதே கால் சென்டரில்தான் அவரது தாயும் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். தாயின் வசிப்பிடமும் மிச்சலின் வீட்டில் இருந்து சில நிமிடங்களில் செல்லும் தூரத்திலேயே இருந்தது. இதையெல்லாம் அறிந்ததும் மிச்சலின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

தனது தாயின் செல்போன் எண்ணைக் கண்டுபிடித்து உடனடியாக அவருடன் பேசினார் மிச்சல்.

“நான் உங்கள் மகள் என்று நினைக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க வரலாமா?” என மிச்சல் குரல் கம்மக் கேட்க, முதலில் திகைத்து, பின் பிரான்சைன் சிம்மன்ஸ் வெடித்து அழத் தொடங்கிவிட்டார்.

பின்னர், தாயும் மகளும் முதல்முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர். அப்போது ஒரே உணர்ச்சிப் பிரவாகம். தனது அம்மாவுக்கு வேறொரு கணவரின் மூலம் பிறந்த 3 மகள்கள் இருப்பதைத் தெரிந்துகொண்டார் மிச்சல்.

மிச்சல் தனக்கு ‘புதிதாக’ கிடைத்திருக்கும் அம்மா, சகோதரிகளுடன் புது உறவைக் கொண்டாடி வருகிறார். 

மேலும் செய்திகள்