தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 450 பேருக்கு பணி நியமன ஆணை

உடுமலையில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 450 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2018-02-25 21:30 GMT
உடுமலை,

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவற்றின் சார்பில் உடுமலை ஸ்ரீஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது.

முகாமில் 72 நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனத்துக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்தனர். மொத்தம் 4,500-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக முகாமில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் சுமார் 1,500 பேர் மட்டுமே இந்த முகாமில் கலந்துகொண்டு வேலை கேட்டு விண்ணப்பித்தனர். இதில் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒரே நபரை இரண்டு, மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்திருந்தன. மொத்தத்தில் நேற்று நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 450 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி கூட்டரங்கில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன் முன்னிலைவகித்தார். வேலைவாய்ப்பு துறை கோவை மண்டல இணைஇயக்குனர் ஆ.லதா வரவேற்று பேசினார். வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 450 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னாராமசாமி, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி மல்லிகாராணி, உடுமலை ஆர்.டி.ஓ. அசோகன், தாசில்தார் ப.தங்கவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்