சேலம் குருவம்பட்டி வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய 8 பேர் கைது; 500 லிட்டர் அழிப்பு

சேலம் குருவம்பட்டி வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், 500 லிட்டர் சாராயம் அழிக்கப்பட்டது.

Update: 2018-02-25 22:15 GMT
கருப்பூர்,

சேலம் குருவம்பட்டி வனப்பகுதியில் சமீபகாலமாக சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெற்று வந்தது. சாராயம் காய்ச்ச வரும் மர்மநபர்களால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்துடன் இருக்கும் நிலை இருந்து வந்தது. இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கருக்கு புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சூரமங்கலம் போலீசாருக்கு கமி‌ஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று உதவி போலீஸ் கமி‌ஷனர் செல்வராஜ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்–இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், கேசவன் மற்றும் 30 போலீசார் அந்த வனப்பகுதிக்கு பகுதிக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.


போலீசார் சோதனையில் அங்கு சாராயம் ஊறல் போடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சாராய ஊறல்களை அழித்ததுடன், 7 பேரல்களில் இருந்த 500 லிட்டர் சாராயத்தையும் அழித்தனர். மேலும் இதுதொடர்பாக 8 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள், கருப்பூர் அருகே உள்ள வட்டகாடு மஞ்சையான்காடு பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 45), கோவிந்தராஜ் (38), வெங்கடேஷ் (36), அவருடைய தம்பி கணேசன் (30), மகாராஜன் (50), அவருடைய மகன் சதீஸ் (26), தேவராஜன் (44), பெரியசாமி (42) ஆகியோர் என்பதும், சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்