அம்பேத்கர் சிலை அகற்றம் உதவி கலெக்டர் அலுவலகம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்

ஆத்தூர் அருகே அம்பேத்கர் சிலை அகற்றியதை கண்டித்து உதவி கலெக்டர் அலுவலகம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-02-25 22:45 GMT
ஆத்தூர்,

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் காமராஜர் காலனி பகுதியில் நேற்று முன்தினம் அம்பேத்கர் சிலை அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக பீடம் அமைக்கும் பணி நடந்தது. தகவலறிந்ததும் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அனுமதியின்றி சிலை அமைக்கக்கூடாது என கூறி பணிகளை தடுத்து நிறுத்தினர். போலீசார் சென்ற பிறகு மீண்டும் பீடம் அமைக்கும் பணிகளை தொடர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நள்ளிரவு 2 மணி அளவில் அம்பேத்கர் உருவச்சிலையை திறந்து சிலைக்கு மாலை அணிவித்தனர்.


இதுபற்றி அறிந்ததும் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்.கார்த்திக்குமார் தலைமையில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று காலை அங்கு சென்றனர். உரிய அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டதாக கூறி சிலையை பீடத்தில் இருந்து இறக்கி சாக்கு பையால் சுற்றினர். பின்னர் சிலையை ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

இதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சி.க.முத்து தலைமையில் சுமார் 20 பேர் ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர். பின்னர் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினரிடம் சிலையை ஏன் அகற்றினீர்கள்? என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு நேற்று காலை 10 மணியளவில் உதவி கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகம், தாண்டவராயபுரம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்