ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

மெலட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் தர வேண்டும் என்று பொதுமக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-02-25 22:45 GMT
மெலட்டூர்,

பாபநாசம் தாலுகா, மெலட்டூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது . இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள் மற்றும் வெளி பிரிவு நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்சிகிச்சை, குடும்பநல அறுவை சிகிச்சை, சித்த மருத்துவம், மகளிர் மகப்பேறு மருத்துவம் உள்பட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் உள்ளன. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மெலட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான நரசிங்கமங்களம், மூனுமரம், ரெங்கநாதபுரம், இரும்புதலை, இடையிறுப்பு, கோவத்தக்குடி, கரம்பை, காட்டுகுறிச்சி, நரியனூர், கொத்தங்குடி, வெண்ணுகுடி உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

மேலும் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் அம்மாப்பேட்டை வட்டார சுகாதார மையங்களுக்கு தலைமை மருத்துவமனையாகவும் செயல்பட்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போதுமான கட்டிட வசதிகள் இல்லை. இந்த மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இதனால் கட்டிடம் சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து காணப்படுகின்றன.

அடிப்படை வசதிகள்

இதனால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் அச்சப் படுகின்றனர். இதேபோல சுகாதார நிலையத்தை சுற்றி முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. இந்த சுகாதார நிலையத்தின் வெளிப்பகுதியில் மருத்துவமனையின் தாய்சேய்நலவிடுதி உள்ளது. இரவு நேரங்களில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மின்விளக்கு வசதிகள் இல்லாததால் பாதுகாப்பு இன்றி வந்து செல்கின்றனர்.

இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்