திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் மாசிமகம் விழா மார்ச் 1-ந் தேதி நடக்கிறது

திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவிலில் 40-வது ஆண்டு மாசிமகம் விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது.

Update: 2018-02-25 22:15 GMT
திருச்செங்கோடு,

தென்னிந்திய அளவில் புகழ்பெற்று சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று சிறப்பு மிக்க சிவ ஆலயங்களில் ஒன்றாக விளங்கி வருவது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஸ்ரீஅர்த்தனாரீஸ்வரர் மலைக்கோவில். இக்கோவிலில் சேர, சோழ, பாண்டியர்கள் விஜயநகர பேரரசுகளாலும் பராமரிக்கப்பட்டு பல்வேறு திருப்பணிகள் செய்விக்கப்பட்ட திருத்தலமாகும். இந்த கோவிலில் வருகிற மார்ச் 1-ந் தேதி 40-வது ஆண்டு மாசிமகம் விழா நடைபெற உள்ளது.

இதற்காக சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் கடந்த ஜனவரி 13-ந் தேதி முதல் மாலையணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இந்த மாலையணிந்த பக்தர்கள் சார்பில் திருச்செங்கோடு நகரில் சுகுந்த குந்தலாம்பிகை உடனமர் கைலாசநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 108 விளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

மாசிமகம் விழா

நேற்று கைலாசநாதர் கோவிலில் இருந்து அர்த்தனாரீஸ்வரர் மலையை பக்தர்கள் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திருவாசகம், தேவாரம், சிவபுராணம் பாடியபடி பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபாடு செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வருகிற 1-ந் தேதி திருச்செங்கோடு அழகுநாச்சி என்கிற பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்து அர்த்தனாரீஸ்வரர் மலை கோவிலுக்கு மாலை அணிந்த பக்தர்கள் குடங்களில் பால், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றை தலையில் சுமந்து ஊர்வலமாக செல்கின்றனர். பின்னர் சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்து, மாசி மகம் விழா நடக்கிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மாசி மகம் விழாக்குழு தலைவர் முத்து, செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் ராஜகோபால் உள்ளிட்ட நிர்வாகிகளும், பக்தர்களும் செய்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்